காற்றழுத்த தாழ்வு மண்டலம காரணமாக சென்னையில் கடந்த சனிக்கிழமை இரவு பெய்த மழையால் தலைநகர் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது. தி,நகர், கோடம்பாக்கம், ராயபேட்டை, வடபழனி, விருகம்பாக்கம், கே.கே.நகர், அரும்பாக்கம், அமைந்தகரை, கோயம்பேடு, வியாசர்பாடி, வில்லிவாக்கம் என்று திரும்பிய திசைகள் எல்லாம் தண்ணீர் மட்டுமே சாலைகளில் தேங்கியது.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூரில் மழைநீர் சாலைகளில் அதிகளவில் தேங்கியுள்ளது. இதனால், கொளத்தூரில் மட்டும் ஆயிரக்கணக்கான வீடுகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கொளத்தூர் தொகுதிக்கு தமிழக பா.ஜ.க.வினர் அண்ணாமலை தலைமையில் படகில் சென்று பார்வையிட்டனர். முதல்வர் மு.க.ஸ்டாலினும் அதற்கு முன்னரே கொளத்தூரில் நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்த நிலையில், அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “படகில் நாங்கள் சென்று வந்ததை செய்தியாக்கியதால் கொளத்தூரில் பணிகள் முடுக்கிவிடப்பட்டது. உண்மை நிலையை முன்பே எடுத்துச் சொல்லி இருந்தால் பணிகள் விரைந்து முடிந்திருக்கும். நாங்களும் கொளத்தூருக்குள் படகில் சென்றிருக்கமாட்டோம்.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
சென்னையில் கொளத்தூர் மட்டுமின்றி பல பகுதிகளும் மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய வர்த்தக நகரான தி.நகரில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கியது. அதேபோல, கே.கே.நகர், குரோம்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் எல்லாம் மழைநீர் தேங்கி கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மட்டும் சுமார் 500க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இவற்றை அகற்றும் பணியில் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஆட்சியில் சென்னையில் மழைநீர் வெளியேறுவதற்கும், வடிவதற்கும் முறையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளாததே இந்த வெள்ளப்பெருக்கிற்கு காரணம் என்று தி.மு.க. சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. வானிலை ஆய்வுமையத்தின் எச்சரிக்கையை ஏற்று முறையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே இந்த பாதிப்பிற்கு காரணம் என்று அ.தி.மு.க. குற்றம்சாட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்