மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக சென்னையில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைக்கச் சென்ற பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை போலீசார் தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொந்தளித்த தமிழிசை
அனுமதி இல்லாமல் கையெழுத்து இயக்கம் நடத்துவதாக கூறி, போலீசார் அவரை தடுத்த நிலையில், அவர்களுடன் தமிழிசை கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், விருகம்பாக்கம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியே ஒரு போர்க்களம் போல மாறிப் போனது. காவல்துறையினர் தன்னை தடுத்த நிலையில், ‘தான் அமைதியாக பொதுமக்களை சந்திக்க வந்தது உங்களுக்கு பிரச்னையா? மக்களே தானாக வந்து மும்மொழிக் கொள்கைக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்து இட வருகிறார்கள். அதை தடுக்க உங்களுக்கு என்ன உரிமை உள்ளது?’ என்று கேள்விக்கு மேல் கேள்வியை தமிழிசை காவல்துறையினரை நோக்கி வைத்தார்.
சுத்துப்போட்ட போலீசார், அசாராத தமிழிசை
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக தமிழிசையை சுற்றி வளையம் அமைத்த பெண் போலீசார் அவரை எங்கும் செல்லவிடாமல் விடாப்படியாக தடுத்து நிறுத்தினர். ஆனால், அதற்கெல்லாம் அசாரத தமிழிசை சவுந்தரராஜன் தொடர்ந்து அவர்களிடம் வாக்குவாதம் செய்து, தன்னை கையெழுத்து இயக்கம் நடத்தவிடுமாறும் தன்னை தடுப்பதற்கு என்ன காரணம் ? என்றும் அடுக்கட்டுக்கான கேள்விகளை கேட்டு அவர்களை திணறடித்தார்.
மும்மொழிக் கொள்கைக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து இயக்கம்
தமிழ்நாடு அரசு மும்மொழிக் கொள்கையை கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், நேற்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மத்திய பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கை திட்டத்தின்படி தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என கூறி ஒரு கோடி பேர் கையெழுத்திடும் இயக்கத்தை தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக இன்று, பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விருகம்பாக்கம் அருகே மக்களிடம் மும்மொழி கொள்கையைவ் வலியுறுத்தி கையெழுத்து வாங்கும் இயக்கத்தை தொடர்ந்தார். ஆனால், காவல்துறை அனுமதி இல்லாமல், கையெழுத்து இயக்கம் நடத்துவதாக கூறி அவரை போலீசார் தடுத்தனர்.
முன்னாள் ஆளுநருக்கே இந்த நிலையா?
இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜகவினர், தமிழிசை சவுந்தரராஜன் பாஜகவின் மூத்த தலைவர் மட்டுமல்ல 2 மாநிலங்களுக்கு ஆளுநராக இருந்தவர். ஆனால், அவரையே காவல்துறையினர் ஒரு சாதாரண கையெழுத்து இயக்கத்தை கூட நடத்தவிடாமல் தடுத்து நிறுத்துவது எனன் நியாயம் என்றும் கையெழுத்து இயக்கம் வெற்றி பெற்றால், தமிழக மக்கள் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக இருப்பது தெரிந்துவிடும் என்பதால் இதுபோன்ற நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.