அசானி புயல் காரணமான தமிழகத்தில் பல மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள 'அசானி' புயல்திசைமாறி கடலை நோக்கிச் செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்புயல் அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை பரவலாக மழை பெய்துள்ளது. சென்னை, தஞ்சாவூர், திருச்சி, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் விழுப்புரம், திருச்சி, நாமக்கல், ஈரோடு, நாகை, வேலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை தொடரும் என ஏற்கனவே வானிலை மையம் எச்சரித்திருந்தது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அசானி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று வட ஆந்திரா, ஒடிசாவை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் அதன் அருகில் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவக்கூடும். மேலும், ஆந்திரா மாநிலத்திற்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.
கோயம்பேடு, வடபழனி, கிண்டி, நுங்கம்பாக்கம், அரும்பாக்கம், ஆலந்தூர், பாரிமுனை, விருகம்பாக்கம், வளசரவாக்கம், போரூர், தி.நகர், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அண்ணாசாலை, ராயபுரம், கே.கே.நகர், எழும்பூர், தி.நகர், பாலவாக்கம், நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது. புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது. சென்னையில் பெய்து வரும் இந்த மழையால் வாகன ஓட்டிகள், காலையில் பணிக்கு செல்வோர் சற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
சென்னை மட்டுமின்றி காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இதுதவிர தமிழ்நாட்டின் பிற பகுதிகளான நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. அசானி புயல் காரணமாக தமிழ்நாடு மட்டுமின்றிக ஆந்திரா மற்றும் ஒடிசாவில் கனமழை பெய்து வருகிறது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருகிறது. அவ்வப்போது 90 கி.மீ. வேகத்திலும் காற்று வீசி வருகிறது.
வடக்கு ஆந்திர கடல் பகுதி மற்றும் அதை ஒட்டிய ஒடிசா கடற்கரை பகுதிகளிலும் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள அசானி புயல், ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையை கடக்காமல் மீண்டும் கடலை நோக்கி திரும்பும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடுமையான வாட்டிய கோடையில் மழை பெய்து வருவதால் அனைவரையும் கொண்டாத்தில் ஆழ்த்தியுள்ளது.