அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழுவில் இடம்பெற்றுள்ள சிபிஐ அதிகாரி ரவியை விடுவிக்க தமிழக காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு குறித்து விசாரணை நடத்த தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார், அரியலூர் டிஎஸ்பி மதன் மற்றும் சிபிஐ டிஎஸ்பி ரவி அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்நிலையில் சிறப்பு புலனாய்வு குழுவில் இடம் பெற்றுள்ள டிஎஸ்பி ரவியை விடுவிக்க கோரி சிபிஐ இயக்குனர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில், அவர் பிற வழக்குகளை விசாரிக்க வேண்டி உள்ளதால் சிறப்பு புலனாய்வு குழுவில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு விசாரணை முக்கிய கட்டத்தில் இருப்பதால் சிபிஐ டிஎஸ்பி ரவியை முழுமையாக சிறப்பு புலனாய்வு குழுவில் இருந்து விடுவித்து விடக்கூடாது என்றும் அவர் பிற வழக்குகளை விசாரிக்க அனுமதிக்கலாம் என்றும், சென்னையிலிருந்து இடமாற்றம் செய்யக்கூடாது என்றும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, சிபிஐ டிஎஸ்பி ரவி பிற வழக்குகளை விசாரித்துக் கொள்ளலாம் என்று அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.