பெற்றோர் பிற மாநிலத்தில் ஜாதிச் சான்று பெற்றவர்கள் என்பதற்காக வகுப்புவாரி இட ஒதுக்கீட்டில், மாணவிக்கு மருத்துவ மாணவர் சேர்க்கை மறுத்தது சட்டப்படி தவறானது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


 

நீட் தேர்வில், 720க்கு 506 மதிப்பெண்கள் பெற்ற மஹதி பர்லா என்ற மாணவி தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்தார். விளக்க குறிப்பேட்டில் குறிப்பிட்ட ஆவணங்களை பதிவேற்றமும் செய்திருந்தார்.

 

அவரது விண்ணப்பத்தை பரிசீலித்த மருத்துவ மாணவர் சேர்க்கை தேர்வுக்குழு, பிற மாநிலங்களில் பெற்ற ஜாதிச் சான்று இட ஒதுக்கீட்டுக்கு பரிசீலிக்கப்பட மாட்டாது என்ற விளக்கக் குறிப்பேடு பிரிவைச் சுட்டிக்காட்டி, மாணவி மஹதியின் தந்தை ஆந்திரா மாநிலத்தில் ஜாதிச் சான்று பெற்றுள்ளதால்  பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு பரிசீலிக்க முடியாது என மறுத்து விட்டது.

 

இதை எதிர்த்தும், தனக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை வழங்கக் கோரியும் மஹதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கை நீதிபதி சுரேஷ்குமார் விசாரித்தார். பிற மாநில ஜாதிச் சான்றிதழ் பரிசீலிக்கப்பட மாட்டாது என்ற பிரிவு, மாணவர் சேர்க்கை கோரும் விண்ணப்பதாரருக்கு தான் பொருந்துமே தவிர அவரது பெற்றோருக்கு அல்ல எனவும், மாணவி தமிழகத்தில் தான் ஜாதிச் சான்று பெற்றுள்ளார் எனவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி,  பெற்றோர் பிற மாநிலத்தில் ஜாதிச் சான்று பெற்றவர் என்பதற்காக மாணவர் சேர்க்கை மறுப்பது சட்டப்படி தவறானது எனக் கூறி, மனுதாரரை பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக கருதி, கலந்தாய்வில் அனுமதிக்கவும், தகுதி பெற்றால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை வழங்கவும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

----------------------


தெருநாய்கள் வெறிநாய்களாவதை தடுக்க உணவுடன் மருந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

 









தெருநாய்கள் வெறிநாய்களாவதை தடுக்க நோய்வாய்பட்ட நாய்களுக்கு உணவுடன் மருந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

சென்னை அடையாறு மண்டலத்தில் வெறி பிடித்த நாய்களை பிடித்து சிகிச்சை அளித்து, தடுப்பூசி செலுத்தப்படுகிறதா என்பது குறித்து வினோத்குமார் என்பவர் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் எழுப்பிய கேள்விகளிக்கு உரிய பதில் கிடைக்காததால் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் மேல் முறையீடு செய்தார்.

 

இந்த மேல் முறையீடு மனு மாநில தகவல் ஆணையர் எஸ்.முத்துராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை தரப்பில் நாய்களால் மக்கள் துன்புறுவதாக புகார் வந்தால், அவற்றை பிடித்து கருத்தடை செய்யப்பட்டு, தடுப்பூசியும் போடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

 

பின்னர் தகவல் ஆணையர் எஸ்.முத்துராஜ் பிறப்பித்துள்ள உத்தரவில், சென்னை மாநகரத்தின் அனைத்து தெருக்களிலும்  தெரு நாய்கள் திரிவதாகவும், அவை வெறி நாய்களாக மாறுவதை தடுக்காவிட்டால் ஏற்படும் பாதிப்புகளை கணக்கிட முடியாது என குறிப்பிட்டுள்ளார். அவற்றிற்கு தடுப்பூசி போடுவதும், மாத்திரை வழங்குவதும் தான் தீர்வாகும் என சுட்டிக்காட்டியுள்ளர்.

 

வெறி நாய்கடியால் பாதிக்கப்படும் மக்களுக்கு அரசு அதிக பணம் செலவு செய்தாலும், தற்போது உள்ள கட்டமைப்புகளை வைத்துக்கொண்டு நாய்களை பிடித்து சிகிச்சை அளிப்பது என்பது இயலாத காரியம் என்றும், அப்படி செய்தாலும் ஒரு சதவீதத்திற்கும் குறைவான நாயாகளுக்குத்தான் சிகிச்சை அளிக்க முடியும் என அதிருப்தி தெரிவித்துள்ளார்.

 

இதற்கு மாற்று ஏற்பாடாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழத்தின் இளநிலை, முதுநிலை ஆராய்ச்சி மாணவர்களை கொண்டு சென்னையின் அனைத்து வார்டுகளிலும் நோய்வாய்பட்ட நாய்களுக்கு உணவுடன் கலந்து மாத்திரைகள் வழங்குவது, காட்டு விலங்குகளுக்கு ஊசி செலுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி உரிய முடிவுகளை எடுக்கும்படி சென்னை மாநகராட்சிக்கும், கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்திற்கும் அறிவுறுத்தி உள்ளார்.