நிபா வைரஸ் - சுகாதாரத்துறை எச்சரிக்கை

Continues below advertisement

மேற்கு வங்கத்தில் நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து , நாடு முழுதும் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தும்படி, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.

தமிழகத்தில் பொது சுகாதாரத் துறை கண்காணித்து வருகிறது. தற்போது வரை, தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்றாலும், பதற்றமின்றி விழிப்புடன் இருக்குமாறு, பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.

Continues below advertisement

இது குறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம் வெளியிட்ட அறிக்கையில் ; 

நிபா வைரஸ் விலங்குகள் வாயிலாக பரவும் நோய் தொற்று. குறிப்பாக, பழ வகை வவ்வால்கள், பன்றிகள், நாய்கள், குதிரைகள் போன்ற விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. வவ்வால்கள் உமிழ்நீரால் மாசுபட்ட பழங்களை சாப்பிடுவதன் வாயிலாகவோ, பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கி தொடர்பு கொள்வதன் வாயிலாகவோ, நோய் தொற்று மற்றவர்களுக்கு பரவுகிறது. காய்ச்சல், தலைவலி, வாந்தி, குழப்பம், துாக்கமின்மை, மூச்சுத்திணறல், மயக்கம், வலிப்பு போன்ற அறிகுறிகள் உள்ளதா என மக்கள் கவனிக்க வேண்டும்.

கழுவாத பழங்களை சாப்பிட கூடாது

நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட ஆறு முதல் 21 நாட்களுக்குள் அறிகுறிகள் தென்படும். இந்த நோய் பாதித்தவர்கள், 40 முதல் 75 சதவீதம் உயிர் பிழைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு. இது போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். கழுவாத அல்லது கீழே விழுந்த பழங்களை சாப்பிடுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

பதநீர், கள் போன்றவற்றை அருந்துவதையும் தவிர்க்க வேண்டும். துார்வாரப்படாத கிணறுகளின் அருகே செல்லக் கூடாது. பொது சுகாதாரத் துறை, எல்லை மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அம் மாவட்டங்களில் சந்தேகத்திற்கிடமான நோய் தொற்றுகளை, முன்கூட்டியே கண்டறிந்து செயல்பட, மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. அரசு சார்பில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பீதி அடைய வேண்டாம் என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.