காஞ்சிபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அருகே காவளான் கேட் பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் நேரு தலைமையில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பி சண்முகம் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக அரசின் சட்ட விரோதமான செயல்பாடுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.



இவ்வார்ப்பாட்டத்தில் பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள இடத்தில் பாதிக்கப்பட்ட 13 கிராம பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி தனது கண்டனத்தை தெரிவித்தனர். மேலும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பி சண்முகம் பேசுகையில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 13 கிராமத்தில் உள்ள ஏரி குளம் விளைநிலம் குடியிருப்பு வீடுகள் அழித்து புதிய விமான நிலையம் அமைப்பதால் மக்களின் வாழ்வுரிமை வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தெரிவித்தார்.



மேலும் 2013 ஆம் ஆண்டு நிலம்கையகப்படுத்துதல் சட்டத்திற்கு விரோதமாக தமிழ்நாடு அரசு செயல்படுவதை கண்டித்தும் பரந்தூர் சுற்றி உள்ள 13 கிராமங்களுக்கு செல்லும் சாலையில் காவல் தடுப்புகள் தற்காலிக காவல் நிலையங்கள் ஆகியவற்றை அமைத்து மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பும் அச்சுறுத்தலும் ஏற்படுவதால் அவற்றை உடனடியாக அகற்றி சுதந்திரமாக மக்கள் வாழ வழிவகை செய்ய வேண்டும் என்றும், வாழும் உரிமை அரசியல் சாசனம் மக்களுக்கு வழங்கி உள்ள அடிப்படை உரிமை அதற்கு பாதிப்பு ஏற்படாதவாறு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், தமிழக அரசு பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைப்பதை மறுபரிசீலனை செய்யக்கோரி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் 230 நாட்களுக்கு மேலாக பதற்றத்துடனும் எப்போது நிலத்தை கையகப்படுத்துவார்கள் என்ற அச்சத்துடனும் இருந்து வருவதாக பொதுமக்கள் தெரிவிப்பதாக கூறினார்.



ஆகவே பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை அரசாணையில் வெளியிட்டு கையகப்படுத்தக்கூடிய நிலங்களை வரைபடத்தை 13 கிராம மக்களுக்கும் தெரியப்படுத்தி அவர்களுக்கு இவ்விடம் விமான நிலையம் வேண்டுமா விவசாய நிலங்களாகவே இருக்க வேண்டுமா என்ற அச்சத்தை போக்கும் வகையில் தமிழக அரசு நடந்து கொள்ள வேண்டும் என்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கூறினார். இவ்வார்ப்பட்டத்தில் அசம்பாவிதங்கள் தவிர்க்க, சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏதேனும் ஏற்படாமல் இருக்க காவளான் கேட் பகுதியில்  100க்கும் மேற்பட்ட போலீசார் குவித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

சென்னை பசுமை விமான நிலையம்

 

சென்னையில் இரண்டாவது விமான நிலையத்திற்காக பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு  மற்றும் அதை ஒட்டியுள்ள மொத்தம் 13 கிராமங்களில் இருந்து சுமார் 4800க்கும் அதிகமான ஏக்கர் பரப்பிலான நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த திட்டத்திற்கான மதிப்பு சுமார் 20,000 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 3000 ஏக்கர் அளவிற்கு, பட்டா நிலங்களாகவும் , மீதம் உள்ள நிலங்கள் அரசு நிலமாகவும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு  ஆகிய கிராமங்களில் பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான நிலையம் அமைய உள்ள பகுதியில், ஏரி ,குளம், கால்வாய் என ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.