வங்கக்கடலில் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கடந்த சனிக்கிழமை இரவு கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னையின் பிரதான நகரங்கள் உள்பட அனைத்து பகுதிகளும் வெள்ளக்காடாய் மாறியது. மேலும், தொடர்ந்து நான்கு நாட்களாக மழை பெய்து வந்ததால் சாலைகளில் தேங்கிய மழைநீரை அகற்றுவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டு, பணிகள் இன்னும் நடைபெற்று வருகிறது.


சென்னையின் முக்கிய பகுதியான மயிலாப்பூரிலும் மழைநீர் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தேங்கியதுடன் வீடுகளுக்குள்ளும் புகுந்தது. இந்த நிலையில், மயிலாப்பூர் அருகே உள்ள மந்தைவெளி பகுதியில் உள்ள திருவள்ளூர்பேட்டை சாலை, விநாயகம் தெரு, சொக்கலிங்கம் தெரு, அம்மணி அம்மாள் தெரு, பட்டம்மாள் தெரு, செயின்ட் மேரி சாலைகளில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியிருந்தது. அந்த நீருடன் கழிவுநீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்துள்ளது.




கடந்த நான்கு நாட்களாக மழையாலும், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததாலும் மிகவும் அவதிப்பட்டு வந்த மக்கள் தெருக்களில் உள்ள தண்ணீரை தங்களது சொந்த பணத்தை செலவழித்து, மோட்டார்கள் மூலம் தெருக்களில் உள்ள நீரை அகற்றியுள்ளனர். இதற்காக பல ஆயிரங்கள் வரை செலவாகியுள்ளது. ஆனாலும், மாநகராட்சி சார்பில் எந்த அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்கவில்லை என்றும், தேங்கிய நீரை அகற்றுவதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அப்பகுதிவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.


தொடர்ந்து பெய்துவந்த கனமழை நின்ற பிறகும் நேற்று வரை சாலையில் தேங்கிய மழைநீரின் அளவு குறையாமலே இருந்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தின் அருகே உள்ள செயின்ட் மேரி சாலையில், சாலையில் தேங்கிய நீரை உடனே அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.




அப்போது, அந்த வழியாக சென்ற தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவர், மறியலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பகுதிவாசிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இருந்து 10க்கும் மேற்பட்ட தி.மு.க.வினரை அழைத்துவந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பகுதிவாசிகள் மீது கும்பலாக தாக்குதல் நடத்தியுள்ளனர். ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த பொதுமக்களும் பதில் தாக்குதல் நடத்தினர்.


உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பகுதிவாசிகளை சமாதனப்படுத்தினர். தகவலறிந்த மயிலாப்பூர் எம்.எல்.ஏ. வேலுவும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தார். பின்னர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பகுதிவாசிகளிடம் உடனடியாக மழைநீர்  அகற்றப்படும் என்று உத்தரவாதம் அளித்தார். மேலும், முந்தைய ஆட்சியில் முறையாக கட்டமைப்புகள் திட்டமிடப்படாததே இந்த பாதிப்பிற்கு காரணம் என்று குற்றம்சாட்டினர். மேலும், பாதிக்கப்பட்ட பல இடங்களில் தான் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், எதிர்பாராதவிதமாக இந்த இடத்தில் மோதல் ஏற்பட்டுவிட்டதாகவும் கூறினார்.





எம்.எல்.ஏ. கூறியதுபோலவே சாலையில் தேங்கிய மழைநீரை அகற்றுவதற்காக மாநகராட்சிக்கு சொந்தமான இரண்டு லாரிகள் வந்தது. ஆனால், எம்.எல்.ஏ. புறப்பட்டு சென்ற பிறகு அந்த லாரிகளும் புறப்பட்டுவிட்டது. இதனால், சாலையில் தேங்கிய மழைநீர் இன்னும் அகற்றப்படாமலே உள்ளது. வெள்ள பாதிப்புகளை இடைவிடாது முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு வரும் நிலையில், சாலையில் தேங்கிய அகற்ற போராடிய மக்கள் மீது தி.மு.க.வினர் தாக்குதல் நடத்தியிருப்பது தி.மு.க. தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.