செய்றகை நுண்ணறிவு யுகத்தில் மொழி தொழில்நுட்பத்திற்காக நாட்டிலேயே முதன் முதலாக ’கணித்தமிழ் மாநாடு’ நடத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாரட்டியுள்ளார். 


”ஆங்கிலம் போன்ற மொழிகளுக்கு மென்பொருள் தொழில்நுட்பம் வரும்போது தமிழுக்கும் வந்தாக வேண்டும். எல்லா காலத்திற்கும் தமிழை நிலைநிறுத்தும் முயற்சியே இந்த மாநாடு” என்று புகழாரம். 


கணித்தமிழ் மாநாட்டின் இறுதிநாள் நிகழ்வில் மு.க.ஸ்டாலின் உரையை தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாசித்தார். அதில், இளைய தலைமுறையினர் தொழில்நுட்பத்திலும் தமிழ்மொழியை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையின் விவரம்


” ஓலைச்சுவடிக் காலத்திலிருந்து இன்றைய ஆண்ட்ராய்டு காலம் வரையிலும் அனைத்திலும் கோலோச்சி வரும் மொழியாக நமது அன்னைத் தமிழ் மொழி இருப்பது நமக்கெல்லாம் பெருமை. முன்னைப் பழமைக்கும் பழமையாய் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் நம் தமிழ்மொழி இருப்பதைவிட நமக்கு வேறு பெருமை வேண்டுமா?


வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் தமிழ்மொழியின் நிலையைக் குறித்து ஆராயவும் விவாதிக்கவும், புதிய சிந்தனைகளை உருவாக்கிக் கொள்ளவும், இளம் திறமையாளர்களை அடையாளம் காணவும். பன்னாட்டு கணித்தமிழ் -24' என்கிற மாநாடு தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ் இணையக் கல்விக் கழகம் சார்பில் பிப்ரவரி 8,9.,10 ஆகிய நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது.


கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே தோன்றிய தமிழை, கணினிக் காலத்தில் மட்டுமல்ல,  அடுத்து வரும் எந்தக் காலத்துக்கும் நிலைநிறுத்தும் முயற்சியே இந்த மாநாடு ஆகும். பழம்பெருமை பேசிக் கொண்டு மட்டுமே இருப்பவர்கள் அல்ல நாம்; பழம்பெருமையைத் தக்க வைத்துக் கொள்ளவும் எந்நாளும் சிந்தித்துக் கொண்டு இருப்பவர்கள் நாம்.


இணையப் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. அதில் மாநிலவாரியாகப் பார்த்தால் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக ஐ.ஏ.எம் ஏ.ஐ. என்ற தொலைத்தொடர்பு ஆய்வகத்தின் அறிக்கை கூறுகிறது.


பன்னாட்டுக் கணித்தமிழ் 24 என்ற இந்த மாநாடு, 'தமிழ் நெட் 99 என்ற மாநாட்டை நடத்திய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டில் நடைபெறுவது மிகமிகச் சிறப்பானதாகும்.


திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், 1997-ஆம் ஆண்டே தகவல் தொழில்நுட்பக் கொள்கையை முதன்முதலில் தமிழ்நாட்டிற்கு வகுத்துக் கொடுத்தார் அன்றைய முதலமைச்சர் கலைஞர்.. அரசுப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற, ஏழை கணினி எனும் இயந்திரத்தையே நேரில் அவர்களுக்குக் கணினிக்கல்வி தந்தார். எளிய மாணவர்கள் பார்த்திராத காலகட்டத்தில், -1999-2000-ஆம் ஆண்டே, பள்ளிப் பாடத்திட்டத்தில் மட்டுமின்றி, கலை. அறிவியல், மருத்துவம். சட்டம் உள்ளிட்ட கல்வி பாடத்திட்டங்களிலும் கணினிப் பாடத்தை அவர் கொண்டுவந்தார்.


1996-2001 ஆட்சிக் காலத்திலேயே Empower IT' என்ற நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தி, தகவல் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தைப் பட்டிதொட்டிகள் எல்லாம் தலைவர் கலைஞர் அவர்கள் கொண்டு சென்றார்.


அப்போதே Mobile Governance e-Governance போன்றவை அரசு அலுவலகங்களில் அரசு சேவைகளில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.தமிழ்நாட்டில் IT Professionals ஏராளமாக உருவாகக் காரணமாக இருந்தார்.தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தேடி வந்து தேர்வு செய்யக்கூடிய முதல் நகரமாக சென்னையை மாற்றிக் காட்டினார்.” என்று கருணாநிதி தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டவர் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


கணினித்தமிழ் மாநாடு


”ஒவ்வொரு நாளும் தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. தொழில்நுட்பத்தில் மொழியின் முக்கியத்துவம் அதிகரித்தும் வருகிறது. எந்த விதமான தொழில்நுட்பம் வந்தாலும் அவை அனைத்திலும் தமிழ் வாழ வேண்டும். ஆள வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கமாகும். மொழி வாழ்ந்தால் இனம் வாழும். மொழி தாழ்ந்தால் இனம் தாழும், 'தமிழை வளர்த்து தமிழனை உயர்த்துவோம்' என்பதுதான் எமது அரசின் நோக்கம்!


எப்போது தோன்றியது என்று கண்டறியப்பட முடியாத தமிழ்மொழியை, எப்போதும் சிறப்புற வைக்க இந்தப் பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு 24 அடித்தளம் அமைக்கும் என்பதில் துளியளவும் அய்யமில்லை. செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மொழித் தொழில்நுட்பத்துக்காக இந்தியாவிலேயே முதன்முதலாக மாநாடு நடத்துவது தமிழ்நாடு அரசுதான் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறேன். இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் மொழிக்காக முன்னெடுக்காத பெருந்திட்டம் இந்த மாநாடு. மொழி காக்க உயிரையே கொடுத்தவர்கள் தமிழர்கள் என்பதும் நமது வரலாறுதான்!செயற்கை நுண்ணறிவு (AI). அதிகளவில் மொழி மாதிரிகளை உருவாக்குதல் (LLM), டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கம், கற்றல் கற்பித்தல் தொழில்நுட்பம். மின் ஆளுமை ஆகிய தளங்களில் இம்மாநாடு நடைபெற்றுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.


கணித்தமிழ் மாநாடு சிறப்புகள்


பத்து நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் பங்கேற்றுள்ளனர். முப்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கெடுத்துள்ளன. நாற்பது காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஐம்பதுக்கும் மேற்பட்ட அமர்வுகள் நடைபெறுகின்றன. இவை அனைத்தும் தமிழுக்காகவே என்பது சிறப்பு.செயற்கை நுண்ணறிவு, இயந்திரவழிக் கற்றல், இயற்கைமொழிச் செயலாக்கம். நவீன மொழித் தொழில்நுட்பங்கள் ஆகிய பல்வேறு தலைப்புகளில் ஆய்வுகள் நடந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.


”செயற்கை நுண்ணறிவுப் பாதையில் தமிழ்மொழியை வெற்றிகரமாகப் பயணிக்க வைக்க வேண்டும். தொழில்நுட்பங்களுக்கு ஏற்பத் தமிழ்மொழி. தகவமைக்கப்பட வேண்டும். ஆங்கிலம் போன்ற மொழிகளைப் போல தமிழில் தொழில்நுட்பச் சேவைகள் அனைத்தும் கிடைக்கத் தமிழ்நாடு அரசும் ஆவன செய்யும். உலகளாவிய நிறுவனங்கள் வெளியிடும் மென்பொருட்கள் மற்ற மொழிகளில் வெளியாகி. தமிழுக்குக் காலதாமதமாக வருகிறது. இந்த இடைவெளியை குறைத்தாக வேண்டும். ஆங்கிலம் போன்ற மொழிகளுக்கு மென்பொருட்கள் வரும்போதே தமிழுக்கும் வந்தாக வேண்டும்அத்தகைய பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தமிழ்மொழி சார்ந்த வளத்தையும் வழிகாட்டுதல்களையும் தமிழ்நாடு அரசு வழங்கும்.


இளைய தலைமுறையினர் அனைத்துத் தகவல் தொழில்நுட்பங்களிலும் தமிழை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். குறுஞ்செய்தி முதல் அனைத்து தொடர்புகளையும் முடிந்த வரை தமிழில் கையாண்டால் தலைமுறைகள் தாண்டியும் தமிழ் வாழும். தமிழ்நாட்டு தமிழர்களும், தமிழ்நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து உலகின் பல நாடுகளில் வாழ்பவர்களும் இணைய வழியாகத் தமிழ்ப் பாடங்களைப் படிக்க வேண்டும். தமிழ் ஆர்வத்தை, தமிழ் அறிவாக அனைவரும் மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்கள். தமிழ்மொழி கற்பிப்பு, ஆய்வுக்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது. அதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தொல்லியலையும் தொழில்நுட்பத்தையும் ஒருசேரப் பற்றி நிற்போம்.” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையில் குறிப்பிட்டுள்ளார்.