குமரிக்கடல் மற்றும் அதையொட்டியுள்ள இலங்கை கடற்கரை பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழ்நாட்டிலும் புதுவையிலும் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சென்னை உள்பட தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கடலோர மாவட்டங்களை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்தது.




சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்து வருகிறது. அரியலூர், திருச்சி, கரூர், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்கள், காரகை்கால் பகுதிகளிலும் இன்று மற்றும் நாளை கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.


காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த வரதராஜபுரம், சாந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு வாரத்திற்கும் மேலாக மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (29.11.2021) வடகிழக்கு பருவ மழையையொட்டியும், வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும், தமிழ்நாடு முழுவதும் பெய்து வரும் கனமழையால் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்து, சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டு, முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.




காஞ்சிபுரம் மாவட்டம் அதன் தொடர்ச்சியாக, முதல்வர் இன்று (29.11.2021) காஞ்சிபுரம் மாவட்டம், வரதராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட பி.டி.சி. குடியிருப்புப் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு, ஆய்வு செய்து, சீரமைப்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், அப்பகுதி மக்களிடம் பாதிப்புகளின் விவரங்களை கேட்டறிந்து அவற்றை சரிசெய்திட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தார்.பின்னர், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக தங்குவதற்காக வரதராஜபுரம் ஊராட்சி, வேல்ஸ் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமிற்கு ஸ்டாலின் நேரில் சென்று, அங்கு தங்கியுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். பொதுமக்களிடம் குறைகளை கேட்க முதல்வர் ஸ்டாலின் இனிமேல் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண