செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி சூர்யா (34) இவர் மீது பீர்க்கன்காரணை, ஓட்டேரி, சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உட்பட 50 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இவருக்கு விஜயலட்சுமி (32) என்ற மனைவி மற்றும் கோகுல் என்ற மகன், யுவஸ்ரீ என்ற மகள் உள்ளனர். நெடுங்குன்றம் சூர்யாவும், அவரின் மனைவி விஜயலட்சுமியும் பாஜகவில் இருக்கிறார்கள். இந்நிலையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடுங்குன்றம் ஊராட்சியில் 9வது வார்டு உறுப்பினர் பதவிக்கு விஜயலட்சுமி சுயேட்சையாக போட்டியிட்டு,  வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

 

 



சூர்யா மீது 6 கொலை வழக்குகள் 8 கொலை முயற்சி வழக்குகள் மற்றும் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.  சூர்யா இரண்டு வழக்கில் வாரன் பிறப்பிக்கப்பட்டதால் ஜாமினில் வெளி வந்திருந்த சூர்யா திடீரென தலைமறைவானார். அவரை பிடிக்க தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார். அவரைப் பிடிக்க வேண்டும் என காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் தனிப்படை அமைத்து அவரைத் தேடியும் வந்தனர்.

 



இந்நிலையில் நெடுங்குன்றம் சூர்யா வழிப்பறியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. மேலும் அடிக்கடி தனது ஊருக்கு ஸ்டிக்கர் ஒட்டிய காரில் வந்து செல்வதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்து வந்தன. இதேபோல நேற்று முன்தினம் நெடுங்குன்றம் சூர்யா தனது சொந்த ஊருக்கு காரில் வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கருப்பு கலர் ஸ்டிக்கர் ஒட்டி அவர் வருவது தெரியாமல் இருக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் தகவல் கிடைத்தது.

 

இதனை அடுத்து உதவி ஆய்வாளர் மேரி சினி ஹோம் தலைமையில் தனி படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். காவல்துறையினர் தன்னை பிடிக்க வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதை உணர்ந்த சூர்யா, தப்பிச்செல்ல முயன்ற பொழுது இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று காவல்துறையினர் பிடித்தனர்.

 



பின்னர் சூர்யாவை விசாரணை செய்வதற்காக சங்கர் நகர் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். மேலும் அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ள மறைமலை நகர் காவல் நிலையத்திலும் காவலர்கள் நெடுங்குன்றம் சூர்யாவை விசாரித்தனர். இதனை அடுத்து இரண்டு வழக்குகள் தொடர்பாக தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிமன்ற காவலில் உட்படுத்தி சிறையில் அடைத்தனர். பிரபல ரவுடியை கைது செய்த காவலருக்கு தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் பாராட்டுகளை தெரிவித்தார்.