ஒரு வழி பாதையாக இயக்கக்கூடிய இந்த சிறப்பு ரயில் இன்று நள்ளிரவு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு நாளை காலை நெல்லையை அடையும்.
அலைமோதும் பயணிகள் கூட்டம்
வார இறுதி நாட்களில் எப்பொழுதும் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பல்வேறு பணிகளுக்காக சென்னை வரும் பொதுமக்கள், பல்வேறு காரணங்களுக்காக வார இறுதி நாட்களில் தென்மாவட்டங்களுக்கு படையெடுப்பது வழக்கமாக உள்ளது. வார இறுதி நாளில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு, இன்ப அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
பயணிகளுக்கு மகிழ்ச்சி
என்னதான் வார இறுதி நாட்களில் ஏராளமான சிறப்பு பேருந்துகள் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்பட்டாலும், பேருந்துகள் கூட்டமாகவே இருந்து வருகிறது. சிறப்பு ரயில்கள் ஒருபுறம் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வார இறுதி நாளையொட்டி இன்று சென்னை சென்ட்ரலில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
எங்கெங்கெல்லாம் நிற்கும் ?
சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இன்று நள்ளிரவு சென்னை சென்ட்ரலில் இருந்து 11:20 புறப்படும் ரயில் நாளை காலை 11:20 மணி அளவில் நெல்லையை சென்றடையும். படுக்கை வசதியுடன் கூடிய ரயில் பெட்டிகள் ( ஸ்லீப்பர் கோச் ) மட்டுமே இயக்கப்படும் ரயிலில் செண்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நெல்லைக்கு செல்ல ரூ.475 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் புதிய ரயில் சேவை தொடக்கம்
பயணிகளில் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று வாரம் இரு முறை இயங்கும் வகையில் தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் இடையே புதிய ரயிலை துவக்க ரயில்வே துறை அனுமதி அளித்துள்ளது. தூத்துக்குடியில் இருந்து வாரம்தோறும் வியாழன் மற்றும் சனிக்கிழமை இரவு 10 50 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 7:40 மணி அளவில் மேட்டுப்பாளையம் சென்றடையும்.
அதேபோன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து வாரந்தோறும் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை 7:35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4:20 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி மற்றும் கோவை வழியாக இயக்கப்பட உள்ளது. கோவை - திருப்பதி இடையே இயக்கப்படும் விரைவு ரயில் வரும் 22ஆம் தேதி முதல் சாம்பல்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.