1. செங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையர்மலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரும்பாக்கம் ஊராட்சியில் நடைபெறயிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடக் கூடிய அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பெரும்பாக்கத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.
2. நீலகிரி மாவட்டத்தில் ஆட்கொள்ளி புலியை சுட்டுக் கொல்வதை விட்டு விட்டு, தமிழக வனத்துறை மிக கவனமாக செயல்பட்டு புலியை வனத்துக்குள் திருப்பி அனுப்புவதற்காக உள்ளூர் மக்கள் உதவியுடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கேட்டு கொண்டுள்ளார்.
3. சிறந்த முறையில் பட்டுச்சேலையை வடிவமைத்தமைக்காக காஞ்சிபுரத்தை சேர்ந்த நெசவாளர்கள் 5 பேருக்கு தேசிய விருதுகளை மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
4. இன்று மதுரை, தேனி, உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன்மிக கனமழையும், நாளை தென்மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணிநேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.
5. வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார் அட்டை, தேசிய ஊரக வேலை திட்ட அட்டை, வங்கி அல்லது தபால் அலுவலக கணக்கு புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சகத்தின் மருத்துவக் காப்பீடு ஸ்மார்ட் கார்டு, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட், ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6. திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய இரு மாவட்டங்களில் ஏடிஎம் மையங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பிடிபட்டனர்.
7. சென்னையில் அரசு அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய சோதனையில் 31.45 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
8. தமிழகம் முழுதும், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் உள்ளூர் போலீசாரின் அதிரடி சோதனையில், சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 55 ஆயிரத்து 613 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
9. தமிழகத்தில் இன்று நடைபெறும் மெகா முகாம்களில், 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும், என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
10. வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள, நெடுஞ்சாலை துறை சார்பில், நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு, 392.16 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.