சென்னை சர்வதேச விமான நிலையம் மற்றும் விமான நிலைய வளாகத்தில் உள்ள, கார்கோ சரக்கக பகுதிக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெருமளவு கடத்தல் பொருட்கள் வருகின்றன. முன்பெல்லாம் தங்கம் மற்றும் மின் சாதன பொருட்கள் அதிக அளவில் வெளிநாடுகளில் இருந்து கடத்திக் கொண்டுவரப்பட்டன. ஆனால் தற்போது போதைப் பொருட்கள், போதை மாத்திரைகள், புகையிலையிலான சிகரெட், பதப்படுத்தப்பட்ட கஞ்சா அதிக அளவில் வருகின்றன. இவற்றை கண்டுபிடிப்பதில், விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் மட்டுமே செயல்படுவது மிகப்பெரிய சவாலாக இருந்தது.


சுங்கத்துறை மோப்ப நாய்


இதை அடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், சென்னை விமான நிலைய சுங்கத்துறையில் மோப்ப நாய் பிரிவு புதிதாக தொடங்கப்பட்டது. பஞ்சாப் மாநிலம் அட்டாரி என்ற பகுதியில், சுங்கத்துறை, மத்திய தொழில்பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை, ரயில்வே பாதுகாப்பு படை ஆகியவற்றில் பயன்படுத்தப்படும், மோப்ப நாய்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் நிலையம் உள்ளது. அங்கிருந்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை, மோப்ப நாய் பிரிவுக்கு ஓரியோ, ஆர்லி என்ற, ஒரு வயது உடைய இரண்டு மோப்ப நாய்கள், சென்னை விமான நிலைய சுங்கத்துறைக்கு, கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் வந்தன.


3  மோப்ப நாய்கள் 


இதில் ஓரியோ போதைப் பொருட்களை மோப்பம் பிடித்து கண்டுபிடிப்பதிலும், ஆர்லி வெடி பொருட்கள் உட்பட அபாயகரமான பொருட்களையும் கண்டுபிடித்து வந்தன. ஆனால் சமீப காலமாக வெளிநாடுகளில் இருந்து போதைப் பொருட்கள், அதிக அளவில் கடத்தப்பட்டு வந்ததால், அவைகளை கண்டுபிடிப்பதற்காக கடந்த 2022 ஆம் ஆண்டு,  இரிணா என்ற 10 மாத பயிற்சியை முடித்த, மோப்ப நாய் சென்னை விமான நிலைய சுங்கத்துறை மோப்ப நாய் பிரிவில் இணைக்கப்பட்டது. இதை அடுத்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை பிரிவில், 3  மோப்ப நாய்கள் சிறப்பாக செயல்பட்டு வந்தன.


கட்டாய ஓய்வு 


இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில், போதைப் பொருள் கடத்தலை கண்டுபிடிப்பதில் நிபுணராக செயல்பட்டு வந்த சுமார் 3  வயது உடைய இராணி மோப்ப நாய், கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டது. ஆனாலும் இரானி உடல் நல பாதிப்புடனும் கூட, சிறப்பாக பணியாற்றி வந்தது. ஆனால் சுங்கத்துறை அதிகாரிகள், இராணி நோய்வாய்ப்பட்டது குறித்து மிகுந்த கவலை அடைந்தனர். இதை அடுத்து விலங்கியல் நிபுணர்கள், விலங்குகள் மருத்துவ நிபுணர்கள், இரானியை பரிசோதித்து விட்டு, அதற்கு கட்டாய ஓய்வு அளிப்பது நல்லது என்ற கருத்தை தெரிவித்தனர்.


இராணிக்கு பிரிவு உபசார நிகழ்ச்சி


இதை அடுத்து சென்னை விமான நிலைய மோப்ப நாய் பிரிவில், மிகச் சிறப்பாக பணியாற்றி வந்த, போதைப் பொருட்கள் கட்டளை கண்டுபிடிக்கும் நிபுணரான மோப்ப நாய் இராணிக்கு, நேற்று அக்டோபர் 31 மாலையுடன் பணியில் இருந்து, கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்தில், இராணிக்கு பிரிவு உபசார நிகழ்ச்சியை சுங்கத்துறை அதிகாரிகள் கனத்த இதயத்துடன் செய்து, வழி அனுப்பினர்.


ஆர்வம் காட்டும் சமூக ஆர்வலர்கள்


அதன்பின்பு ஓய்வு பெற்ற மோப்பநாய் இராணி, பஞ்சாபில் உள்ள மத்திய மோப்ப நாய்கள் பிரிவில், ஓய்வு பெற்ற, உடல் நலம் பாதிக்கப்பட்ட நாய்கள் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கு இந்த மோப்ப நாய், வைத்து பராமரிக்கப்படும். விலங்கியல் ஆர்வலர்கள், நாய்கள் வளர்ப்பதில் ஆர்வம் காட்டும் சமூக ஆர்வலர்கள், விருப்பப்பட்டால், அங்கிருந்து முறையான ஆவணங்களை சமர்ப்பித்து, இராணியை தத்து எடுத்து வளர்த்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.


2 மோப்ப நாய்கள் வெகு விரைவில்..


இதற்கிடையே சென்னை விமான நிலையத்தில், மோப்ப நாய் பிரிவில், இராணியின் இடத்தை நிரப்புவதற்கு, மேலும் இரண்டு மோப்ப நாய்கள் வெகு விரைவில் வர இருக்கின்றன. பஞ்சாப் மாநிலம் அட்டாரியில் உள்ள மோப்ப நாய்கள் பயிற்சி மையத்தில், அதற்காக 10 மாத பயிற்சியை பெற்று வரும், ஒரு வயதுடைய  2 மோப்ப நாய்கள் வெகு விரைவில், சென்னை விமான நிலைய சுங்கத்துறையில் இருக்கின்றன. இதையடுத்து சென்னை விமான நிலைய சுங்கத்துறையில் உள்ள மோப்ப நாய்களின் எண்ணிக்கை நான்காக உயர உள்ளது. இவ்வாறு சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.