வரும் 10ம்- தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற உள்ள நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தமிழக அரசு அனுமதி வழங்கக்கோரி கடந்த இரண்டாம் தேதி இந்து முன்னணி கட்சியினர் காஞ்சிபுரம் சங்குபாணி விநாயகர் கோவில் வாசலில் விநாயகருக்கு, தேங்காய் உடைத்து, தோப்புக்கரணம் போட்டு, நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் நடைபெற்றபொழுது, போரட்டம் நடைபெற்ற கோவில் அருகே உள்ள பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் உரிமையாளர் இந்து முன்னணியினரின் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சாமி படத்துக்கு செருப்பை அறிவித்திருந்தார் என சொல்லப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த இந்து முன்னணி கட்சியினர், இச்செயலைக் கண்டு ஆத்திரம் அடைந்து பூஜை பொருள் கடையை அடித்து உடைத்தனர். உடனடியாக சம்பவ இடத்தில் இருந்த போலீசார் இந்து முன்னணியினரின் புகாரின் பேரில் சாமி படத்திற்கு செருப்பை அணிவித்த பூஜைபொருள் கடைக்காரர் பூபதியை கைது செய்து சிவகாஞ்சி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் கடை உரிமையாளர் பூபதி மற்றும் அவரது மனைவி ஆகியோரை அடித்து, கொலை மிரட்டல் விடுத்தது, பெண்ணை அவதூறாக பேசியதாக அளித்த புகாரின் பேரில் சிவகாஞ்சி போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் இன்று திடீரென பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் கூரம் விசுவநாதன், நகர தலைவர் அதிசயம் குமார், நகர மேற்கு பொது செயலாளர் ஜீவானந்தம்,முன்னாள் நகர தலைவர் ஜெகதீசன், இந்து முன்னணி கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தேவதாஸ், சந்தோஷ் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஏழு நபர்களும் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக கைது செய்யப்பட்ட ஏழு நபர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பாரதிய ஜனதா கட்சியினர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தகவலறிந்த பாஜக காஞ்சிபுரம் உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விடுதலை செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. பூஜை பொருட்கள் விற்கும் கடையின் உரிமையாளரை, தாக்கிய விவகாரம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியினர் ஏழு நபர்கள் காஞ்சிபுரத்தில் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சுவாரஸ்ய செய்திகளுக்கு...
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X