மாண்டஸ் புயலினால் பெய்துவரும் கனமழையால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் இன்று மதியம் திறக்கப்படும் என மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இன்று(9-12-22) செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நண்பகல் 12 மணிக்கு 100 கன அடி நீர்வெளியேற்றப்படுகிறது, எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


அதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால், புழச் ஏரிக்கான நீர்வரத்து அதிகரித்துகொண்டே உள்ளது. இதனால், இன்று மதியம் முதல் கட்டமாக, ஏரியில் இருந்து 100 கன அடி உபரி நீர் திறந்துவிடப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. புழல் ஏரியின் மொத்த நீர்மட்டம் என்பது 21 அடி, இன்று காலை நிலவரப்படி ஏரியில் 17 அடி நிரம்பி இருந்தது. ஏரிக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் உபரி நீர் திறக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தற்போது புழல் ஏரிக்கு 140 கன அடி நீர் வந்துகொண்டுள்ளது. 


மாண்டஸ் புயல்


வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மாண்டஸ் புயல் இன்று மதியம் கரையைக் கடக்குமென கணிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் தண்டையார் பேட்டை, பெரம்பூர் பகுதிகளில் இதுவரை அதிகபட்ச மழை பதிவாகி உள்ளது.


தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள  ’மாண்டஸ்’ புயல் காரணமாக வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரப்  கடற்கரைகளுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இப்புயல் கடந்த ஆறு மணி நேரத்தில் 12 கி.மீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு  திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்தது.


அதிக மழைப்பதிவு


இது  திருகோணமலைக்கு வட-வடகிழக்கே சுமார் 240 கிமீ தொலைவில் (இலங்கை), யாழ்ப்பாணத்திலிருந்து 270 கிமீ கிழக்கு-வடகிழக்கே (இலங்கை), காரைக்காலில் இருந்து 270 கிமீ கிழக்கு-தென்கிழக்கே மற்றும் சுமார் 270 கிமீ தெற்கே- சென்னைக்கு தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது. 


இந்நிலையில், சென்னையில் அதிகபட்சமாக தண்டையார்பேட்டையில் 7 செ.மீ, பெரம்பூரில் 6 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது. சென்னை டிஜிபி அலுவலகம், எம்.ஜி.ஆர் நகர், ஆலந்தூர், அயனாவரம் தாலுகா அலுவலக பகுதிகளில் தலா 5 செ.மீ மழை பதிவாகி உள்ளது.


இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர். செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மேலும், டெல்டா மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கரையை கடக்கும்


மேலும் புதுச்சேரி - காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் நாளையும் என இரண்டு நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


மாண்டஸ் புயலானது, மேற்கு-வடமேற்கு திசையை கடந்து, வட தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தென் ஆந்திர பிரதேச கடற்கரைகளுக்கு இடையே புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா மாகாணத்திற்கு இடையே கரையை கடக்க கூடும் என ஏற்கெனவே வானிலை மையம் தெரிவித்துள்ளது