புதுச்சேரியில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்கு எடுத்துச் செல்லப்பட்டு எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவிவருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. கொரோனா பொது முடக்கம் இருக்கும் சூழலில், ஊரடங்கை மதிக்காமல் இருசக்கர வாகனங்களில் வலம் வருவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இவர்களைக் கட்டுப்படுத்தும் வகையில் விழுப்புரம் மாவட்ட காவல் துறையினர் நடவடிக்கையில் இறங்கினர். சாலையில் ஆங்காங்கே தடுப்புகளை ஏற்படுத்தி, தவிர்க்க முடியாத காரணங்களுக்காக செல்வோரை மட்டும் அனுமதித்த போலீஸார், மற்றவர்களை திருப்பி அனுப்பினர். வெளியே சுற்றி திரிந்தவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தனர். இந்த நடவடிக்கையால், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 30 காவல் நிலையங்களிலும் சுமார் 200 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஞானோதயம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைசாவடியில் வளத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, உதவி காவல் ஆய்வாளர் குமார் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர்.
அந்த லாரியின் உள்ள 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 573 கேன்களில் மொத்தம் 20 ஆயிரத்து 55 லிட்டர் எரிசாராயம் இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், லாரி டிரைவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர், மராட்டிய மாநிலத்தை சேர்ந்த இக்ரம் (வயது 50) என்பதும், மராட்டிய மாநிலத்தில் இருந்து புதுச்சேரிக்கு எரிசாராயத்தை கடத்தி செல்ல முயன்றதும் தெரிந்தது. கடத்தி வரப்பட்ட எரிசாராயத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ.75 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதையடுத்து டிரைவர் இக்ரமை போலீசார் கைது செய்தனர். மேலும் எரிசாராயம் மற்றும் எரிசாராயத்தை கடத்த பயன்படுத்த லாரியையும் போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையம் எடுத்து சென்றனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், செஞ்சி துணை காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன் ஆகியோர் கடத்தல் குறித்து விசாரணை நடத்தினர். புதுச்சேரியில் டாஸ்மார்க் மற்றும் சாராய கடைகள் கொரோனா தொற்று அதிகரிப்பின் காரணமாக மூடப்பட்டது, இந்த நிலையில் கள்ளச்சந்தையில் அதிக அளவில் சாராயம் விற்பனை செய்து வருகின்றனர். கர்நாடக மாநில பதிவு கொண்ட லாரியின் மூலம் கேன்களில் எரிசாராயத்தை எடுத்துச்சென்று புதுச்சேரியில் விற்பனைக்கு விநியோகிப்பதற்கு முயன்றபோது சோதனைச் சாவடியில் போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டதால் அதிக அளவில் மதுவின் தேவை இருப்பதாகவும், அதை வைத்து தமிழகம்-புதுச்சேரியில் கள்ளச்சந்தை மது விற்பனை செய்ய பெரிய அளவில் ஒரு தரப்பினர் திட்டம் தீட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆபத்தை உணர்ந்து சம்மந்தப்பட்டவர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.