சென்னை விமான நிலைய புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முணையத்தில், கடந்த மாதம் 25ஆம் தேதி சோதனை ஓட்டம் அடிப்படையில், வங்கதேசம் தலைநகர் டாக்காவில் இருந்து, சென்னை வந்த யு.எஸ்.பங்களா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள் இயக்கப்பட்டன. அதன்பின்பு இன்று அந்த புதிய முனையத்தில், சோதனை அடிப்படையில் மூன்று விமானங்கள் இயக்கப்பட்டன. சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னையில் இருந்து குவைத் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மற்றும் சிங்கப்பூரிலிருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ஆகிய மூன்று விமானங்கள் இயக்கப்பட்டன.



 

இந்த விமானங்களில் பயணிக்கும்  பயணிகள், நெரிசல், நீண்ட வரிசை போன்ற கூட்டம் இல்லாமல், சாதாரணமாக சமூக இடைவெளியுடன் கூடிய வரிசைகளில் நின்று, குடியுரிமைச் சோதனை, சுங்கச் சோதனை, பாதுகாப்பு சோதனை போன்றவைகளில் ஈடுபட்டனர். அதைப்போல் வருகை பயணிகள், கன்வயர் பெல்ட்டுகளில் வந்த, தங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு, கூட்டம் இல்லாமல் சாதாரணமாக, மகிழ்ச்சியுடன் வெளியேறி சென்றனர்.

 



 

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், 2,400 கோடி ரூபாய் திட்ட மதிப்பில், 2.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டு வரும், ஒருங்கிணைந்த விமான முனையங்களின் முதல் கட்டடம் நிறைவடைந்துள்ளது. இந்த முனையம் செயல்பாட்டுக்கு வந்ததும், சென்னை விமான நிலையத்தில், மேலும் பல உள்நாடு மற்றும் சர்வதேச விமானங்கள் இயக்கப்பட இருப்பதால், பயணிகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தற்போது சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை 2.2 கோடியாக உள்ளது. புதிய முனையம் செயல்பாட்டுக்கு வந்த பின்பு,3.5 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.