விநாயகர் சதர்த்தி பண்டிகையை கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கொண்டாட முடியாமல் போனது. இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணம் காட்டி இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் கொண்டாட தடை விதித்தனர் இருப்பினும் பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று பல மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தியினை கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் வருகிற நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் விநாயகர் சிலைகளை பொதுவெளியில் வைக்க மற்றும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்க தமிழக அரசு தடை விதித்தது.




தமிழக அரசின் இந்த தடைக்கு பாஜக உள்பட ஒருசில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் நிபந்தனைகளுடன் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அனுமதிக்க வேண்டும் என கூறி பாரதிய ஜனதா கட்சியினர் இந்து முன்னணி அமைப்பினர், மற்றும் விநாயகர் சிலை நல சங்கத்தினர் பல்வேறு விதமான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 



இந்த நிலையில் பண்ருட்டி அடுத்த வையாபுரிபட்டினத்தில் இங்கு சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் விநாயகர் சிலை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். விநாயகர் சிலை தயாரிப்பு வியாபாரி ஞானப்பிரகாசம் என்பவர் 7 அடி அளவில் விநாயகர் சிலை விற்பனை செய்ததாக தகவல் வந்ததன் அடிப்படையில் பண்ருட்டி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் காவல் துறையினர் அந்த இடத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு சிலை தயாரிக்கும் குடோனுக்கு சீல் வைத்தனர். இதனால் வியாபாரிகள் தொழிலாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர் இதில் காவல்துறையினருக்கும் சிலை தயாரிப்பாளருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.