சென்னை, காஞ்சிபுரம், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் மீட்புப் பணிகளைச் செய்ய மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) தயார் நிலையில் இருக்கிறது என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தார். மாநில பேரிடர் மீட்பு படை சமூக திறன் மேம்பாடு மற்றும் மாநிலத்திற்குள் விழிப்புணர்வு உருவாக்கும் திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வடகிழக்குப் பருவமழை:
வடகிழக்கு பருவமழைக்காலத்தில், வங்கக்கடலில் சில தினங்களுக்கு முன் உருவான முதல் குறைந்த காற்றழுத்த நிலையானது வலுப்பெற்று, பகுதியாக மாறி, பிறகு தீவிர காற்றழுத்த பகுதியாக மாறி, தற்போது மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்ட ஆகிய மாவட்டங்களில் பெருமழையாக பெய்துக் கொண்டிருந்த இந்த காற்றழுத்தம், நேற்று முன்தினம் வலுவடைந்து சற்று நகர்ந்து, கடலூர், டெல்டா மாவட்டங்களை நேற்று காலைமுதல் மையம் கொண்டிருந்தது. கடந்த 3 தினங்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் நிலையில், நேற்று காலை முதல், வடமாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கொடித்தீர்த்து வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மழைநீரால் பல வீடுகளில் தண்ணீர் புகுந்தும், சம்பா பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கியதால் விவசாயிகளும், பொதுமக்களும் வேதனை அடைந்துள்ளனர். பல இடங்களில் மரங்கள் முறிந்தும், மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால் போக்குவரத்து மற்றும் மின்சாரம் தடைபட்டுள்ளது.
மாநில பேரிடர் மீட்பு படை :
மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள SDRF குழு தயார் நிலையில் உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களுக்கு SDRF-ன் 4 குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. சென்னையில் மழைநீர் அதிகம் சூழ்ந்து இருக்கும் பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு காவல் துறை மற்றும் தமிழக கடலோர காவல்படை குழுவைச் சேர்ந்த 30 பேர் கொண்ட நீச்சல் குழுவினர், தங்கள் மீட்பு உபகரணங்களுடன் காவல்துறை தலைமையகத்தில் தயார் நிலையில் உள்ளனர்.
இதேபோல், தமிழக கடலோர காவல்படையின் கமாண்டோ பிரிவைச் சேர்ந்த 60 நீச்சல் வீரர்கள், தமிழகத்தின் பிற பகுதிகளில் மீட்புப் பணிகள் மேற்கொள்ள தயாராக உள்ளனர். கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவ சமூகங்களைச் சேர்ந்த தன்னார்வலர்கள் பலர் மீட்புப் பணிகளுக்காக படகுகளுடன் தயாராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும், மீட்புப் பணிகளில் ஈடுபடவும் அனைத்து காவல் துறையினரையும் தயார் நிலையில் வைத்திருக்குமாறு அனைத்து நகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்டக் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மழை நிலவரம் :
வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தென்மேற்கே வங்க கடல் பகுதியில் நேற்று நிலை கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிக தீவிரமாக உள்ளது. பெரும்பாலான இடங்களை மழை பெய்துள்ளது. 6 இடங்களில் அதிக கனமழையும், 14 இடங்களில் மிக கனமழையும், 108 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக சீர்காழிகள் 44 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது கடந்த 122 ஆண்டுகளில் பதிவான மிக அதிகபட்ச மழையாகும். தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் 12,13 தேதிகளில் பரவலாகவும், 14 ,15ல் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.