கனமழை காரணமாக சென்னையில் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது இதனால் புளியந்தோப்பில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று நடைபெறவிருந்த ஐந்து திருமணங்கள் தாமதமாகின.
சென்னையில் தொடர் மழை காரணமாக் நகரின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கி உள்ளது, புளியந்தோப்பில் உள்ள ஆஞ்சிநேயர் கோவிலில் மழை வெள்ளம் புகுந்ததன் காரணமாக மணமக்கள் கோவிலுக்கு வெளியே வரிசையாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. நேற்றைய தினம் மட்டும் 5 திருமணங்கள் அந்த கோவிலில் நடைபெறவிருந்தது. இந்த திருமண நிகழ்ச்சிகள் பல மாதங்களுக்கு முன்பாகவே திட்டமிடப்பட்டவை.
கோவிலுக்கு வெளியே காத்திருந்த மணமகன் ஒருவர், "கோவில் வளாகத்தில் தண்ணீர் தேங்கியிருப்பதால் உள்ளே யாரும் செல்ல முடியாத சூழல் இருக்கிறது, பல மணி நேரம் காத்திருக்கும் அவலமும் ஏற்பட்டுள்ளது. குறைந்தபட்சம் கோவில் போன்ற பொது மக்கள் கூடும் இடங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரை உடனடியாக அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறினார்.
தொடர் மழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பின் போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த சூழலை சமாளிப்பதில் பல சவால்கள் இருக்கிறது. மேலும் அரசு தரப்பில் நீர்நிலைகளை ஆய்வு செய்யும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் நகராட்சி நிர்வாகத்திற்கான மாநில அமைச்சர் கே.என்.நேரு, தண்ணீர் தேங்குவதால் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க மாநில மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்கள் எடுத்த நடவடிக்கைகளை சுட்டிக் காட்டினார்.
இந்நிலையில் வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலப்பகுதியை அடைந்ததையடுத்து, வடகடலோர தமிழக மாவட்டம், புதுச்சேரி பகுதிகளின் மேல் நிலைகொண்டுள்ளது. இது இன்றும், நாளையும் தமிழக உள் மாவட்டங்கள், கேரளா வழியாக மேற்கு - வடமேற்கு திசையில் அரபிக்கடல் நோக்கி நகர்கிறது. பின்னர் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொள்ளும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென்கிழக்கு வங்கக்கடலில் 16ஆம் தேதி மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் கணிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுமா? மண்டலமாக மாறுமா? புயலாக வலுப்பெறுமா? தமிழகத்தை கடந்து செல்லுமா என்பது இது உருவான பிறகே கணிக்க முடியும்.