முதியவர்களோடு கேக் வெட்டி கொண்டாடிய சசிகலா
சென்னை கீழ்ப்பாக்கம் நேர்ச்சை திருத்தல மாதா ஆலய வளாகத்தில் அமைந்துள்ள கருணை இல்லத்தில் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா ஆதரவற்ற முதியவர்களோடு இணைந்து கேக் வெட்டியும், முதியோர்களுக்கு உணவு, நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கிறிஸ்துமஸ் பெருவிழாவினை கொண்டாடினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா கூறியதாவது ;
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் முதல் முறையாக ஏழை எளிய கிறிஸ்தவ மக்கள் ஜெருசலம் புனித பயணம் மேற்கொள்ள புனிதமான திட்டத்தை உருவாக்கி கிறிஸ்தவ மக்கள் ஜெருசலம் சென்று வர வழிவகை செய்தார்கள். திமுக என்றாலே சொல்வது ஒன்று செய்வது ஒன்று, திமுக பொய் என்பதை வாய்வழியில் செல்வதை மட்டுமல்லாது எழுத்து வடிவிலும் செய்யக் கூடியவர்கள்.
தோழி திட்டம் பெயர் மாற்றம்
தோழி திட்டம் என்பது பெண்களுக்கான திட்டம் , இத்திட்டத்தை 2013 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தி உள்ளார்கள். திமுக ஆட்சியில் இது பெயர் மாற்றப்பட்டுள்ளது.
கிராமப் புறங்களில் இருந்து வெளியூரிலிருந்து வேலை நிமித்தமாக வருபவர்களுக்கு பாதுகாப்பாக தங்குவதற்கு இடம் வேண்டும் என்பதற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்த திட்டத்தை கொண்டு வந்தார். சென்னை, திருச்சி, கடலூர் மதுரை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் முதலில் கொண்டு வரப்பட்டது, பின்னர் 2014 ஆண்டு 23 கோடி 73 லட்சம் செலவில் தமிழகம் முழுவதும் விரிவு படுத்தபட்டது. இந்த திட்டத்தின் பெயரை மாற்றி தோழி என அறிவித்துள்ளார்கள் இவை ஏற்கனவே உள்ள திட்டம்தான்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற கொலை சம்பவம் தொடர்பான கேள்விக்கு ;
ஒரு மாவட்டத்தில் சராசரியாக 20 முதல் 30 கொலைகள் நடைபெற்று வருகிறது பெரும்பாலான கொலைகள் மறைக்கப்படுகிறது. தனிப்பட்ட காரணமாக நிகழ்ந்ததாக திமுக அரசு தட்டிக் கழிக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் நீதிமன்ற வளாகத்தில் காவல் துறை முன்பாகவே கொலை செய்துவிட்டு தப்பி ஓடுகிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் அனைத்தும் நிகழ்வதற்கான முக்கிய காரணம் போதைப் பொருள் கலாச்சாரம் , திமுக ஆட்சி வந்ததிலிருந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. இளைஞர்கள் இந்த தீய பழக்கத்திற்கு ஆளாகி வருகிறார்கள் இதனை கண்டும் காணாத வகையில் இந்த அரசு தொடர்ந்து இருந்து வருகிறது.
விழுப்புரம், கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் பெருமழையால், உடைமைகளை இழந்து மக்கள் தவித்து வருகிறார்கள். ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவுள்ள ஈரோட்டிற்குச் சென்று மக்களுக்கு நிவாரணம் வழங்கினார். இடைத்தேர்தல் வருவதன் காரணமாக அங்கு சென்று மக்களை பார்ப்பதுபோல் பார்க்கலாம் என்ற எண்ணத்திலேயே அங்கு நிவாரணம் வழங்கியுள்ளார். உண்மையில் நிவாரணம் வழங்க வேண்டும் என எண்ணம் இருந்திருந்தால் மற்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சென்று வழங்கி இருக்க வேண்டும்.
ஜெயலலிதா வழியை பின்பற்றுகிறோம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த போது 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆயிரம் கோடி மட்டுமே கடன் வாங்கி இருந்தார்கள் அதில் எண்ணற்ற திட்டங்கள் மக்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்டன. ஆனால் திமுக ஆட்சி வந்த நான்கு ஆண்டுகளில் தற்போது திமுக 8 லட்சத்து 33 ஆயிரம் கோடி கடன் பெற்றுள்ளனர். கிட்டத்தட்ட ஒரு குடும்பத்திற்கு தலைக்கு 3.5 லட்சம் கடனாக வைத்துள்ளனர்.. இன்னும் மீதமுள்ள ஒரு வருட கால ஆட்சி உள்ளது. நிதியை செலவு செய்ய வேண்டிய விஷயங்களை தவிர்த்து வீண் விஷயங்களுக்கு செலவு செய்து வருகிறார்கள், இந்த ஆட்சி முடியும் முன் 10 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி முடிப்பார்கள்.
அரசாங்கத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக முழுவதும் தெரிந்து வைத்திருப்பவர் நான், திமுக அரசை போன்று விளம்பரத்தை கொடுப்பவர்கள் நாங்கள் இல்லை, களத்தில் இறங்கி மக்களின் தேவையறிந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செயல்படுவார்கள் அந்த வழியிலேயே நாங்களும் பயணித்து வருகிறோம்.
நான் கேட்கும் கேள்விகளுக்கு திமுக அரசால் தற்போது வரை பதில் கூற முடியவில்லை. அதனால் தட்டிக் கழித்து விட்டு செல்கிறார்கள்.
இளைஞருக்கு வேலை என்றார்கள் நான்கு வருடம் கடந்து தற்போது வரை ஒவ்வொரு மாவட்டங்களிலும் படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லாத நிலை உருவாகி உள்ளது சுய தொழில்களுக்கான வேலை எதுவும் உருவாக்கப்படவில்லை, ஒவ்வொரு சுற்றுப்பயனத்தின் போதும் பெண்களுக்கு வேலை இல்லை என தெரிவிக்கிறார்கள்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தையல் தொடர்பான பயிற்சி , பள்ளி சீருடை வைப்பதற்கான அனுமதி வழங்கப்படும் ஆனால் இவை அனைத்தும் தற்பொழுது உள்ள ஆட்சியில் முறையாக இல்லை. பள்ளி மாணவர்களுக்கு சீருடை புத்தகங்கள் ஆகியவை முறையாக வழங்கப்படுவதில்லை. லேப்டாப் சைக்கிள் ஆகியவை கொடுக்கப்படவில்லை மாணவர்களுக்கு புத்தகம் கூட வழங்காமல் பழைய புத்தகத்தை வாங்கி படிக்கும் நிலை தற்போது தமிழகத்தில் உள்ளது.
கேரளாவில் கூட்டணி கட்சி என்பதால் கேள்வி கேட்கவில்லை
மருத்துவ கழிவுகள் கொட்டபட்ட விவகாரம் தொடர்பான கேள்விக்கு ;
ஜெயலலிதா ஆட்சியாக இருந்தால் இது போன்று கழிவுகளை கேரளா அரசு கொட்டி இருக்க முடியுமா ? தற்பொழுது உள்ள அரசு தமிழக கேரள எல்லையில் பாதுகாப்பு முறையாக மேற்கொள்ளவில்லை அதன் காரணமாக தமிழகத்தில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. கேரளாவில் கூட்டணி கட்சி என்பதால் எதுவும் தெரிவிக்க முடியவில்லை என்பதால் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள் என்னவோ..? என கேள்வி எழுப்பினர்
மருத்துவக் கழிவுகள் தமிழக எல்லைகள் கொட்டப்படுவதால் தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மக்களுக்கு நோய் தொற்றுப் பரவும் அபாய சூழல் உருவாகி உள்ளது.. ஆனால் தற்போது நீதிமன்றம் வரை சென்று பிரச்சனை அதிகரித்த நிலையில் தற்போது நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கிறார்கள்.
காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கை எடுத்தார்கள்..? ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் தலையில் கொட்டு வைத்து அதற்கு பின்னர் விளம்பரத்திற்காக நடவடிக்கை எடுக்கிறீர்கள்.. இவை மிகவும் கண்டனத்திற்குரியது, திமுக அரசுக்கு மக்கள் நலன் மீது துளியும் அக்கறையில்லை, மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதால் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது..
வருடத்திற்கு 100 நாள் சட்டப்பேரவை நடத்துவதாக தெரிவித்தார்கள், ஆனால் நான்கு வருடம் கடந்தும் 134 மட்டுமே சட்டப்பேரவை நடத்தப்பட்டுள்ளது, ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 240 நாட்கள் சட்டப்பேரவை நடத்தப்பட்டது.. மக்களின் பிரச்சினையை பற்றி சட்டப்பேரவை பேசுவதற்காக தான் மக்கள் வாக்களித்து உறுப்பினர்களை தேர்வு செய்கிறார்கள், அதிலும் தற்பொழுது உள்ள அரசு எழுத்து வழியாக பொய் கூறி உள்ளது..
பல இடங்களில் மக்கள் உணவுக்கு வழியில்லாமல் தவித்து வருகிறார்கள், ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் சமைத்து உணவு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.. சென்ட்ரலைஸ்ட் கிச்சன் என ஒரே இடத்தில் சமைத்து உணவு எடுத்துச் செல்லப்படுகிறது, இதனால் மக்கள் அவதி அடைகின்றனர், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவு சமைத்து வழங்கப்பட வேண்டும்.. மேலும் அரசு சார்பில் கொடுக்கப்படும் உணவுகள் பயன்படுத்த முடியாததாக இருப்பதாக மக்களும், அரசு அலுவலர்களும் குற்றச்சாட்டும் நிலை உள்ளது..
10 லட்சம் கோடி தமிழக அரசு கடன் பெற்று விட்டால் தமிழக அரசு நமது கையில் இருக்காது.. கடனை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு உள்ளது அதற்கான நடவடிக்கைகளில் மேற்கொள்ள வேண்டும்..
திமுக கணக்கு மக்களிடம் செல்லாது
அதிமுகவின் வாக்கு வங்கி குறையவில்லை திமுகவின் கணக்கெல்லாம் தமிழக மக்களிடம் செல்லாது, இந்தியாவிலேயே தமிழக மக்கள் மிகச்சிறந்த அறிவாற்றல் பெற்றவர்கள் இன்னொரு முறை தவறு நடக்காது, இந்த நம்பிக்கை எனக்கு உள்ளது ஜெயலலிதா ஆட்சி அமையும், மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்போடு தான் எனது ஒவ்வொரு அடியும் எடுத்து வைத்து வருகிறேன் அதனை நிச்சயம் செய்வேன்..
சட்டமேதை அம்பேத்கர் அவர்களின் புகழில் யாரும் குறுக்கே நிற்க முடியாது அது காலத்திற்கும் அப்படியே இருக்கும்..
எதிர்கட்சிகள் பாராளுமன்றத்தில் அந்த அந்த மாநில மக்கள் பிரச்சனை குறித்து பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும், அரசியல் சுய லாபத்திற்காக இதுபோன்ற போராட்டங்கள் நடத்துவது நாட்டிற்கு நல்லது இல்லை எனத் தெரிவித்தார்.