இசுலாமிய மக்களின் உரிமைகளுக்காக தன் உயிர் மூச்சு உள்ளவரை போராடியவரும், மூத்த பத்திரிகையாளருமான எஸ்.எம்.பாக்கர் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு பத்திரிகை சங்கங்கள், அமைப்புகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


துணிச்சலுக்கு சொந்தக்காரரான பாக்கர்


கம்பீர குரலுக்கும் துணிச்சலுக்கும் பெயர் பெற்றவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான எஸ்.எம்.பாக்கர், கனிவு உள்ளத்திற்கும் பிறர் துயர் கண்டால் தானாக ஓடிச் சென்று உதவும் மனிதநேயம் மிக்க நபர் என்பது அவர் அறிந்தவர்களுக்கு மிக தெளிவாக தெரியும். பத்திரிகை துறையில் இன்று கோலோச்சும் பல்வேறு ஜாம்பாவன்களுக்கு அவர் குருவாக, தட்டி கொடுத்து மேலேற்றிவிடும் ஏணியாக இருந்திருக்கிறார்.


தடா கைதியாக சிறைக்கு சென்றவர்


இசுலாமியர்களுக்கான உரிமைகளை கேட்டு அவர் 1995 ல் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து ‘தடா’ கைதியாக அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று பெரும் திரளான மக்கள் ஒன்று சேர்ந்து போராடினர். அந்த போராட்டம்தான், முஸ்லீம் முன்னேற்ற கழகம் வலுவான மக்கள் அமைப்பாக மாற காரணமாக இருந்தது என்று மனித நேய மக்கள் கட்சித் தலைவரும் எம்.எல்.ஏவுமான ஜவாஹிருல்லா தெரிவித்திருந்தார்.  தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் உருவாக காரணமானவர்களில் பாக்கரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இன்று நல்லடக்கம்


இந்திய தவ்ஜித் ஜமாத் அமைப்பின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த எஸ்.எம்.பாக்கர், உடல நலிவுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நுரையிரல் தொற்றால் அவதிப்பட்டு வந்த அவர் பூரண உடல்நலம் பெற்று மீண்டு வருவார் என்று எண்ணியிருந்த சூழலில், அவருக்கு மேலும் உடல் நலிவுற்றது. இதனால், நேற்று அவர் இந்த மண்ணை விட்டு பிரிந்தார்.  இன்று அவருடைய உடல் அண்ணாசாலை தாரப்பூர் டவர் அருகே உள்ள மசூதியில் வைத்து நல்லடக்கம் செய்யப்படுகிறது.


ஓடி சென்று உதவும் மனம் கொண்ட பாக்கர்


இசுலாமிய மக்கள் மட்டுமின்றி எந்த சமூகத்து மக்களுக்கு, ஏழை எளியவர்களுக்கு, ஒடுக்கப்பட்டவர்களுக்கு சோதனை வந்தாலும், அநீதி இழைக்கப்பட்டாலும் ஓடி சென்று அவர்களுக்கு துணையாக நின்றவர் பாக்கர். அதனால்தான், அவரை எல்லோரும் அன்போடு ‘காகா” என்று அழைப்பார்கள். அப்படிப்பட்ட நல்ல உள்ளம் கொண்ட ஒருவரை பத்திரிகை உலகமும் இந்த சமூகமும் இழந்திருப்பது பேரிழப்புதான்.


முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்


பாக்கர் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் எஸ்.எம். பாக்கர் அவர்கள் மறைவெய்திய செய்தியை அறிந்து வருத்தமடைந்தேன்  என்றும் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், அமைப்பினர் , உறவினர்கள் மற்று நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.