கொரோனா தொற்றை கண்டறிய நடத்தப்படும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யும் அனைவருக்கும் இன்று முதல் சென்னை மாநகராட்சி சார்பில் மருந்து தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதியில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்வோருக்கு இன்று முதல் மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனைகளில் மருந்து தொகுப்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து காத்திருப்போருக்கு முடிவுகள் வரும் முன்பே தொற்றை கட்டுப்படுத்த மருந்து தொகுப்பு வழங்கப்படுகிறது என்று சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. இந்த மருந்து தொகுப்பில் வைட்டமின் சி, ஜிங்க், பாராசிட்டாமல் மாத்திரைகள், கபசுர குடிநீர், மூன்று அடுக்கு முகக் கவசம் ஆகியவை இருக்கும்.
சென்னையில் வீடுகளில் தனிமைப்படுத்துதலில் இருப்போரின் உடல்நிலையை கருதி மருந்து தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், மருந்து தொகுப்பில் உள்ள மாத்திரைகளை மருத்துவர்களின் ஆலோசனை பெற்று முறையாக எடுக்கக்கொள்ளவும் அறிவுறுத்திய சென்னை மாநகராட்சி, பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்போர் தொற்றை பரவாமல் தவிர்க்க வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
வீட்டுத் தனிமையில் உள்ளோருக்கான வழிகாட்டு நெறிமுறைகள்
* தனிக் கழிவறையுடன் கூடிய காற்றோட்டமான தனியறையில் தனிமைப்படுத்த வேண்டும்.
* வீட்டில் உள்ளவர்கள் தனிமையில் உள்ளோரின் அறையில் நுழையக்கூடாது.
* சுயதனிமையில் இருப்போர், சத்தான உணவை சாப்பிட வேண்டும்.
* மற்றவர்களுடன் தொடர்பு இல்லாதவாறு உணவை பெற வேண்டும்.
* போதுமான அளவு தண்ணீர், பழரசத்தை பருக வேண்டும்.
* பெரும்பாலும் பிறரிடம் பேசுவதை தவிர்க்க வேண்டும். மீறி தொடர்பு கொள்ள நேரிட்டால் சர்ஜிக்கல் அல்லது N95 முகக் கவசம் அணிந்து பேசுங்கள்.
* அடிக்கடி சோப்பு உபயோகித்து குறைந்தது 20 நொடிகள் நன்கு தேய்த்து கைகளைக் கழுவுங்கள் அல்லது ஆல்கஹால் கலந்த கிருமி நாசினியை பயன்படுத்துங்கள்.
* டாக்டரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மட்டும் சரியான நேரத்திற்கு எடுத்து கொள்ளுங்கள்.
* உங்கள் துணிகள் மற்றும் பாத்திரங்களை நீங்களே சுத்தம் செய்யுங்கள். பொருட்களை மற்றவர்களிடம் பகிரக் கூடாது. கழிவுகளைத் தனிப் பையில் சேகரித்து அப்புறப்படுத்தவும்.
* பல்ஸ் ஆக்சிமீட்டரின் மூலம் ஆக்சிஜன் அளவையும் (SPO2), அபாய அறிகுறிகளையும் கண்காணியுங்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்