திருவண்ணாமலையை சேர்ந்த கூலி தொழிலாளியின் மகள் 16 வயதுடைய சிறுமி, இவர் சென்னை கோவளம் பகுதியில் உள்ள பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கி 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பெற்றோர் சிறுமியை சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளனர். இந்தநிலையில் கடந்த 7-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த சிறுமி, யாருக்கும் தெரியாமல் வீட்டில் இருந்த எலி மருந்தினை சாப்பிட்டுள்ளார்.
அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 6 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பெற்றோர்கள் அளித்த புகார் தொடர்பாக கர்ப்பமான சிறுமியை விசாரிக்க காவல்துறையினர் முயன்றபோது அவர் சுயநினைவின்றி இருந்தார். சில தினங்களுக்கு பிறகு அவரது உடல்நலம் சற்று முன்னேற்றம் அடைந்த நிலையிலும் மாணவியால் பேச முடியவில்லை. இந்த நிலையில் தனது கர்ப்பத்திற்கு காரணம் ஹரிபிரசாத் என எழுதி காட்டி உள்ளார்.
கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஹாரிபிரசாத் (31) மாணவியின் வீட்டருகே வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். விடுமுறை நாட்களில் மாணவி வீட்டுக்கு வரும்போது டிரைவர் ஹாரிபிரசாத்துடன் பழகிய நிலையில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த நிலையில் ஹரிபிரசாத்தை போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று முன் தினம் போலீசார் கைது செய்தனர்.
மேலும் சிறுமியின் 6 மாத கர்ப்பம் தொடர்பாக சென்னை உண்டு உறைவிட பள்ளியில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் மாணவி கர்ப்பமாக இருந்தது பள்ளியின் விடுதி காப்பாளர் செண்பகவள்ளி (35) மற்றும் தலைமை ஆசிரியர் குமரகுருபரன் வயது (51) ஆகியோருக்கு ஏற்கனவே தெரிந்தும் பெற்றோரிடம் அதனை கூறாமல் மறைத்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினருக்கோ அல்லது குழந்தைகள் ஆணையத்துக்கோ தெரிவிக்கவில்லை. இதனால் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதாக தலைமை ஆசிரியர் குமரகுருபரன் மற்றும் செண்பகவள்ளியை விசாரணைக்கு பின்னர் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில் நேற்றிரவு 10 மணி அளவில் சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினரிடம் பேசுகையில்:- மாணவிக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு தகவல் தெரிந்ததும், விடுதி காப்பாளர் மற்றும் பள்ளியின் தலைமையாசிரியர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்திருந்தால் மாணவிக்கு உளவியல் ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் சிகிச்சைகள் அளித்து தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை தடுத்திருக்கலாம் என தெரிவித்தனர்.