காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டு பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளில்  பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காஞ்சி மாநகரில் பெருகிவரும் மக்கள் தொகை மற்றும் வணிக நிறுவனங்களின் பயன்பாடு காரணமாக பாதாள சாக்கடையில், அவ்வப்பொழுது அடைப்புகள் ஏற்பட்டு கழிவு நீரானது சாலைகளில் வெளியேறியும், துர்நாற்றம் வீசுவதாலும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டு வருகின்றனர். அவ்வாறு பாதாள சாக்கடையில் ஏற்படும் அடைப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் அவ்வப்போது நீக்கும் பணியினை  மேற்கொண்டு வருகின்றனர்.



 

இதனிடையே பாதாள சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்ய பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், மத்திய, மாநில அரசுகள் பாதாள சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை நீக்க பணியாளர்களை பயன்படுத்தக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடையில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்ய வாகன இயந்திரங்கள்  பயன்படுத்தப்பட்டு வருகிறது.



 

இந்நிலையில் தற்போது பயன்படுத்தப்படும் வாகன இயந்திரங்களுக்கு மாற்றாக தற்காலத்திற்கு ஏற்ப அதி நவீன தொழினுட்பத்துடன் கூடிய பாதாள சாக்கடை அடைப்புகளை  நீக்கும் ரோபோடிக் இயந்திரத்தை பயன்படுத்துவற்கு காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு அதனை செயல்படுத்தப்படவுள்ளது.





அதன்படி ஜெம்ரோபோடிக்ஸ் என்ற தனியார் ரோபோடிக்  நிறுவனம் தயாரித்துள்ள அதி நவீன  காமிராவுடன் பல்வேறு நவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய பாதாள சாக்கடை அடைப்புகளை நீக்கும் ரோபோடிக் இயந்திரத்தின், செயல்பாடுகளை நேரடி செயல்முறை மூலம் அறிந்திடும் பொருட்டு காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுவருகிறது.

 



 

இன்றைய தினம் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு ஒலிமுகமதுபேட்டை பகுதியில் பாதாள சாக்கடையில் உள்ள அடைப்புகளை நீக்கி, இந்த ரோபோடிக் இயந்திரத்தின் செயல்பாடுகளையும், செயல்முறைகளையும், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் முன்னிலையில் மாநகராட்சி ஆணையர் கண்ணன், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி  பணியாளர்களுக்கும் தனியார் ரோபோடிக் நிறுவனம் செய்து காண்பித்தது.



 

இதுகுறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ்  கூறுகையில், காஞ்சிபுரம் மாநகரப் பகுதியில் பாதாள சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை நீக்க தற்காலத்திற்கு ஏற்ப நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ரோபோடிக் இயந்திரங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தனியார் நிறுவனம் ஒன்று அதன்  செயல்பாடுகள் மற்றும் அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும்  நேரடியாக செய்முறை விளக்கமளித்துள்ளது.



 

சுமார் 38 லட்ச ரூபாய் மதிப்புள்ள இந்த ரோபோடிக் இயந்திரம் மூலம்  125 கிலோ எடை வரை அடைப்புகளை வெளியே எடுக்கும் இதன் செயல்பாடுகளை முழுமையாக  ஆய்வு செய்த பிறகு இதனை வாங்கி பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதன் மூலம்  பாதாள சாக்கடையில் ஏற்படும் அடைப்புகளை நீக்கும் பணியில் மனிதர்கள் பயன்படுத்துவது முற்றிலுமாக நிறுத்தப்படும் என தெரிவித்தார். இந்த ரோபோடிக் இயந்திரத்தின் செயல்முறை விளக்கத்தின் போது காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் கண்ணன், மாமன்ற உறுப்பினர்கள் சுரேஷ், சசிகலா அஸ்லாம் பேகம் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் என பலர் உடனிருந்தனர்.