நாட்டின் குடியரசு தின விழாவை முன்னிட்டு, சென்னை நகரில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி அன்றைய தினம் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது!


சென்னையில் பலத்த பாதுகாப்பு


இந்தியா முழுவதும் நாளை குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. டெல்லியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு முதன்முறையாக கோடி ஏற்ற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி பல சர்ச்சைகளுக்கு இடையே கோடி ஏற்ற இருக்கிறார். இது தொடர்பாக சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, "ஜனவரி 26, 2023 அன்று குடியரசு தினத்தையொட்டி, காமராஜர் சாலை-வாலாஜா சாலையில் அமைந்துள்ள தொழிலாளர் சிலைக்கு அருகில் தமிழக ஆளுநர் தேசியக் கொடியை ஏற்றி வைப்பார். இதனால் சென்னை காமராஜர் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை மாநகரம் முழுவதிலும் அந்தந்த காவல் நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு, வாகனங்களில் ரோந்து பணி மேற்கொள்ளப்படும்!", என்று கூறப்பட்டுள்ளது.



எல்லைகளில் பாதுகாப்பு தீவிரம்


மேலும், "சென்னை மாநகருக்குள் நுழையும் முக்கியப் பகுதிகளான மாதவரம், திருவொற்றியூர், மதுரவாயல், துரைப்பாக்கம், நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டு, வாகனப் போக்குவரத்தை கண்காணிக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்", என்று கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்: Video: திமுக தொண்டர் மீது கல்லைத் தூக்கி வீசிய அமைச்சர் நாசர்.. குவியும் கண்டனங்கள்.. விமர்சனங்களை பெறும் வீடியோ..


பேருந்து, ரயில், விமான முனையங்களில் பாதுகாப்பு


அதுமட்டுமின்றி, "மீனம்பாக்கம் விமான நிலையம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், சென்னை எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு, மாதவரம் பேருந்து முனையங்கள் போன்ற ஏராளமான பொதுமக்கள் கூடும் பகுதிகளில், வெடிகுண்டுகளை கண்டறியும் தனிப்படைகளுடன் எஸ்சிபி (சென்னை காவல்துறை) அதிகாரிகள் பல்வேறு கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்", என்றும் கூறப்பட்டுள்ளது.



ட்ரோன்களுக்கு தடை


இவற்றுடன் வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் குழு, மோப்ப நாய்கள் பிரிவு மற்றும் மெரினா கடற்கரையில் கடலோரப் பாதுகாப்புப் படை (CSG) நிலைநிறுத்தம் ஆகியவை நாசவேலை எதிர்ப்புச் சோதனையுடன் கண்காணித்தல் மற்றும் தடுப்பதில் இணைந்து செயல்படும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குடியரசு தினத்தையொட்டி, 2023 ஜனவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் மற்றும் பிற ஆளில்லா வான்வழி வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், "மேற்கண்ட தடையை மீறும் பட்சத்தில், மீறுபவர்கள் மீது உடனடி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்", என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.