தமிழ்நாட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் சூழலில், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகியது. இதன் காரணமாக சென்னை உள்பட தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் நாளை மறுநாள் மிக அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


ரெட் அலர்ட் எச்சரிக்கை


ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், சென்னைவாசிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். கடந்த காலத்தில் புயல் மற்றும் பெருமழை காரணமாக சென்னையில் ஏற்பட்ட மோசமான அனுபவங்கள் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.




20 செ.மீட்டர் வரை மழை பெய்யும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக துணை முதலமைச்சர் கூறியிருந்த நிலையில், பேரிடர் மீட்பு குழுக்கள், தன்னார்வலர்கள், அதிகாரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.


21 ஆயிரம் ஊழியர்கள் 


பேரிடர் காலத்தில் எப்போதும் முக்கிய பங்கு வகிக்கும் தூய்மைப் பணியாளர்களையும் தயார் நிலையில் இருக்குமாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 4 நாட்களுக்கு மாநகராட்சி ஊழியர்கள் அனைவரும் சுழற்சி முறையில் பணியாற்ற சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மாநகராட்சியின் கீழ் பணியாற்றும் 21 ஆயிரம் ஊழியர்களும் சுழற்சி முறையில் பணியாற்ற மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.




பாடம் கற்றுக் கொடுத்த புயல்கள்


ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை காலங்களில் சென்னை வெள்ளத்தில் மூழ்குவது தொடர் கதையாக வருகிறது. வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி விட்டு செல்கின்றது.


வேளச்சேரியில், சாலைகளில் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. குடியிருப்புகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், வெள்ள நீரில் பாதிப்படைவதும் ஆண்டாண்டு காலம் நடைபெற்று வருகிறது. இதுபோன்ற மழை நேரங்களில் தங்களது கார்களை பாதுகாப்பாக வைப்பதற்காக, உயரமான பகுதிகளில் பார்க்கிங் செய்வது வழக்கமாக உள்ளது. 




உஷாரான வேளச்சேரி மக்கள் 


அந்த வகையில் தற்போது ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அதிக அளவு மழை பெய்தால், குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தால் மீண்டும் பாதிப்படையும் என்பதால், பாலங்களில் கார்களை இன்று குடியிருப்பு வாசிகள் பார்க்கிங் செய்து இடம் பிடிக்க தொடங்கியுள்ளனர். அந்தவகையில் வேளச்சேரி, ரயில்வே நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தின் மீது ஏராளமான கார்கள் தற்போது பார்க்கிங் செய்து இடம் பிடிக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் வேளச்சேரி பாலத்தில் சிறிய அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட தொடங்கியுள்ளது.