சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இந்த நிலையில் பூங்காவில் இரும்பு வேலிகள் அமைக்கப்பட்ட இருப்பிடத்தில் 2 அரிய வகை ஆண் அணில் குரங்குகள் பொதுமக்கள் பார்வைக்காக விடப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் மர்ம நபர்கள் பூங்காவுக்குள் நுழைந்து அணில் குரங்குகள் அடைத்து வைக்கப்பட்ட இரும்பு கூண்டில் உள்ள இரும்பு வேலியை வெட்டி அகற்றிவிட்டு அதில் இருந்த 2 ஆண் அணில் குரங்குகளை திருடிச்சென்று விட்டனர். தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நீண்ட வாலை பெற்றுள்ள அணில்  குரங்குகள் தோல்பட்டை வரை வாலை உயர்த்தும் தன்மை கொண்டவை.


 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Local body election | பொய் சொல்வதில் மு.க.ஸ்டாலின் முதல்வர்களுக்கு எல்லாம் முதல்வர் - ஈபிஎஸ் பேச்சு

 


 


 

அரியவகை அணில் குரங்குகள் திருடப்பட்டது குறித்து பூங்கா ஊழியர்கள், வனத்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து பூங்கா வனசரக அலுவலர் வாசு, ஓட்டேரி காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் வண்டலூர் உயிரியல் பூங்காவில் அணில் குரங்குகள் பராமரிக்கப்பட்ட கூண்டை பார்வையிட்டனர். அப்போது போலீசார், பூங்கா ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் நடந்த சம்பவத்தை பற்றி விசாரித்தனர்.



 

மேலும் பூங்காவில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து உள்ளனர். இது குறித்து ஒட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அரிய வகை 2 அணில் குரங்குகளை திருடிய மர்ம நபர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். மேலும் திருடிய அணில் குரங்குகளை வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல வாய்ப்புள்ளதால் விமான நிலையம், துறைமுகம் போன்ற பகுதிகளில் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.



 

பூங்காவில் அரிய வகை அணில் குரங்குகள் திருட்டு சம்பவம் எதிரொலி காரணமாக வண்டலூர் பூங்கா நிர்வாகம் சார்பில் பூங்காவின் நுழைவுவாயில், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட 3 இடங்களில் பார்வையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் பூங்காவில் இருந்து 5 மணிக்குள் வெளியேற வேண்டும். தவறும் பட்சத்தில் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பூங்கா அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, திருட்டுச் சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.