Ranipet Chittoor Highway Project Details: பொருளாதாரம் வளர்ச்சி அடைவதற்கு சாலை வசதிகள் மிக முக்கியமாக பங்கு வகிக்கின்றன.‌ ஒவ்வொரு சாலைகள் போடப்படும்போதும், பொருளாதார ரீதியாக அந்த பகுதி வளர்ச்சி அடைகிறது. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாகவே, தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சாலை அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. 


ராணிப்பேட்டை டூ ஆந்திரா வரை...


அந்தவகையில், ஆந்திர மாநில எல்லை வரை 4 வழி சாலையாக மாற்றும் பணியை நெடுஞ்சாலைத் துறையினா் தொடங்கினா். தமிழ்நாடு-ஆந்திர மாநிலம் எல்லை வரை, இணைக்கும் வகையில் சென்னை-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் வாலாஜாபேட்டை அடுத்த முதல் முத்தரசிகுப்பம் வரையிலான சுமார் 28 கிலோமீட்டர் தூரத்திற்கு  நான்கு வழிப்பாதையாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


வாலாஜாப்பேட்டை மற்றும் ராணிப்பேட்டை நகருக்கு வெளியே சுமார் 16 கிராமங்கள் வழியாக, 150 அடி அகலம் கொண்ட 4 வழிச் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. நிதி ஒதுக்கப்படாததால், இந்த சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டு இருந்தது. இந்தியாவில் மத்திய அரசு ரூ.1,338 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த சாலையில் 4 பெரிய பாலங்கள், 2 ரயில்வே மேம்பாலங்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 


முக்கிய அம்சங்கள் என்னென்ன ? 


தேசிய நெடுஞ்சாலை நான்கு வழி சாலையாக அமைக்கப்பட உள்ளது.‌ இரண்டு வழிகளிலும் 2 வழி சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட உள்ளது. வாலாஜாபேட்டை மற்றும் - ராணிப்பேட்டைக்கு 10 கிலோமீட்டர் தூரத்திற்கு புறவழிச்சாலை மற்றும் 4 பெரிய பாலங்கள், 2 ரயில்வே மேம்பாலங்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


கடந்த 2018 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்த வழியாக நாள் ஒன்றுக்கு சுமார் 18000 வாகனங்கள் சென்றுள்ளது. தற்போது இது பல மடங்கு அதிகரித்துள்ளதால், இந்த சாலை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


பயன் அடைபவர்கள் யார்  ?


இந்த தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் சி.எம்.சி, சென்னை, பெங்களூரு மற்றும் திருப்பதி  உள்ளிட்ட நகரங்களுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்தவும் இந்த சாலை உதவும். அதேபோன்று பெல் நிறுவனம் மற்றும் ஏராளமான தொழிற்சாலைகளுக்கு செல்பவர்களுக்கு, தொழிற்சாலையில் இருந்து, உற்பத்தியான பொருட்களைக் கொண்டு செல்வதற்கும் மிக பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ராணிப்பேட்டையில் சிறப்புப் பொருளாதார மண்டலம் 2025ல் நிறைவடையும் நிலையில், இந்தத் திட்டம் கணிசமான பொருளாதார வளர்ச்சியை அப்பகுதிக்கு உறுதி செய்கிறது. அதே நேரத்தில் 2 வழி சர்வீஸ் சாலை அமைக்கப்பட உள்ளதால், உள்ளூர் மக்களுக்கு சர்வீஸ் சாலைகள் மிகவும் பயனுள்ளதாக அமையும்.


தேசிய நெடுஞ்சாலையை வாகனங்கள் அணுக சில பகுதிகளில் மட்டுமே பாதை அமைக்கப்பட உள்ளது. இதனால் வாகனங்கள் நெடுஞ்சாலையில் தங்கு தடையில்லாமல் விரைவாக செல்ல முடியும். இதனால் பயணம் நேரம் வெகுவாக குறையும்.


தேசிய நெடுஞ்சாலை NH-40


தேசிய நெடுஞ்சாலை NH40 சாலையில் அமையுள்ளதால், தேசிய நெடுஞ்சாலைகள் NH4 மற்றும் NH18 ஆகிய சாலைகளையும் இணைக்க உள்ளது. தேசிய நெடுஞ்சாலை NH40 ஆந்திர மாநிலம் கர்னூல் என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலை NH-44 சந்திப்பில் தொடங்கி, கடப்பா மற்றும் சித்தூர் வழியாக ராணிப்பேட்டை வரை உள்ளது.


ஏற்கனவே கர்னூல் முதல் கடப்பா வரையிலான பகுதி நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுவிட்டது. இதனால் தற்போது நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டால், முழுமையாக நான்கு வழிச்சாலையாக தேசிய நெடுஞ்சாலை மாற உள்ளது. இதன் மூலம் தேசிய நெடுஞ்சாலையின் தரம் உயர உள்ளது.