சென்னை பெரம்பூரில், 4-வது ரயில் முனையம் அமைய உள்ளது. இதற்கு திட்டமிட்டுள்ள தெற்கு ரயில்வே, அத்திட்டத்திற்காக பெரம்பூரிலிருந்து அம்பத்தூருக்கு புதிதாக 2 ரயில் பாதைகளை அமைக்க வேண்டும் என பரிந்துரை செய்திருந்த நிலையில், அதற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் முழு விவரங்களை தற்போது பார்க்கலாம்.

Continues below advertisement

4-வது முனையம், ரூ.182 கோடியில் 2 புதிய ரயில் பாதைகளுக்கு ஒப்புதல்

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தை, சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் முனையங்களைத் தொடர்ந்து, 4-வது ரயில் முனையமாக மாற்ற தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. அப்படி செய்ய வேண்டுமென்றால், பெரம்பூர் முதல் அம்பத்தூர் வரை, 6.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக 5 மற்றும் 6-வது ரயில் பாதைகளை அமைக்க வேண்டும். 

4-வது ரயில் முனையத்திற்காக இதை செய்ய வேண்டும் என, ரயில்வே வாரியத்திடம் தெற்கு ரயில்வே பரிந்துரை செய்திருந்தது. இந்நிலையில், 182 கோடி ரூபாய் மதிப்பில், பெரம்பூர் - அம்பத்தூர் இடையே 5 மற்றும் 6-வது புதிய ரயில் பாதைகளை அமைக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

Continues below advertisement

அதிகரித்துவரும் பயணிகள் கூட்டத்தை சமாளிக்க ரயில்வே திட்டம்

தமிழ்நாட்டில் முக்கியமான ரயில் முனையமாக இருப்பது, தலைநகர் சென்னையில் உள்ள எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் முனையம்தான். அங்கிருந்து வட மாவட்டங்கள், வட மாநிலங்கள், மேற்கு மாவட்டங்களுக்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இது தவிர, எழும்பூர் மற்றும் தாம்பரம் ரயில் முனையங்கள் இருந்தாலும், அங்கிருந்து பெரும்பாலும் தென் மாவட்ட ரயில்களே இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், சென்ட்ரல் வழித்தடத்தில் வேறு ரயில் முனையம் ஏதும் இல்லாத நிலையில், அங்கிருந்து செல்லும் அனைத்து ரயில்கள், பயணிகளின் வசதிக்காக பெரம்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்கிறன்றன.

தற்போதைய சூழலில், நாளுக்கு நாள் ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக வட மாநில ரயில்களிலும் கூட்டம் அதிகரித்துவிட்ட நிலையில், புதிய முனையம் ஒன்றை அமைக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டது.

பெரம்பூரில் புதிய ரயில் முனையம்

இந்த சூழலில் தான், ஏற்கனவே ரயில்கள் நின்று செல்லும் பெரம்பூர் ரயில் நிலையத்தை, ரயில் முனையமாக மாற்றி, அங்கிருந்த கூடுதலாக ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டது.

இதற்காக, பெரம்பூர் ரயில் நிலையத்தை 360 கோடி ரூபாயில் சென்னையின் 4-வது ரயில் முனையமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அங்கு பல்வேறு கட்டமைப்புகள் உருவாக்கப்பட உள்ளன.

முன்னதாக, ஆவடியை 4-வது முனையமாக மாற்றலாம் என்று யோசனை செய்யப்பட்ட நிலையில், அங்கு போதிய கட்டமைப்புகள் இல்லாத நிலையில், பெரம்பூரையே ரயில் முனையமாக மாற்ற திட்டமிடப்பட்டது.

இதற்காக, ரயில்வே வாரியத்திடம் சில மாதங்களுக்கு முன் தெற்கு ரயில்வே பரிந்துரை அளித்த நிலையில், அதோடு சேர்த்து, பெரம்பூர்-அம்பத்தூர் இடையிலான புதிய ரயில் பாதைகள் குறித்தும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து, தற்போது இந்த திட்டங்களுக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இது ரயில் பயணிகளுக்கு நிச்சயம் ஒரு மகிழ்ச்சியான செய்தி என்பதில் சந்தேகமில்லை.