செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் ரயில் பெட்டி உணவகம் செயல்பாட்டிற்கு வரவுள்ளது. ரயில் பெட்டி உணவகம் அமைவதற்கான இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள், பெரியோர், சிறுவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் வித்தியாசமான அனுபவங்களை பெற விரும்புகின்றனர். உணவு விஷயத்தில் கூட வித்தியாசமான இடங்களில் உணவு அருந்துவது, விதவிதமான உணவு அருந்துவது, கண்ணுக்கும் நாக்கிற்கும் சுவை தரும் உணவுகளை விரும்பி உண்ணுவது அதிகரித்து வருகிறது. அதற்கேற்றார் போல் பல்வேறு வகையான உணவகங்கள், பெருநகரங்களிலும் மற்றும் அதை சுற்றி உள்ள சிறு நகரங்களிலும் உருவாகத் தொடங்கி இருக்கின்றன. அந்த வகையில் சென்னை புறநகர் பகுதியாக இருக்கக்கூட பொத்தேரி ஜிஎஸ்டி சாலையில் , ரயில் பெட்டி உணவகம் விரைவில் செயல்பாட்டிற்கு வரவுள்ளது.
ரயில்வே துறை எடுத்த முடிவு
இந்திய ரயில்வேத்துறை ரயில் பயணிகளின் கட்டணத்தை உயர்த்தாமல், வருவாய் ஈட்ட பல்வேறு வகையில் முயற்சி எடுத்துவருகிறது. இதற்காக, தனியாருடன் இணைந்து சரக்கு ரயில் சேவையை அதிகரிப்பது, ரயில்வேயில் உள்ள காலி இடங்களை வணிக நோக்கில் வாடகைக்கு விடுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலமாக, கட்டணமில்லா வருவாய் ஈட்டப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, காலி ரயில் பெட்டிகளை உணவகமாக மாற்றி, ரயில் நிலையம் அருகே உணவகம் நடத்த தொழில் முனைவோருக்கு வாய்ப்பு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ரயில் பெட்டி உணவகங்கள் - Rail Coach Restaurant Chennai
முதல்கட்டமாக, தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சென்னை ரயில்வே கோட்டத்தில், சென்னை சென்ட்ரல், பெரம்பூர், பொத்தேரி ஆகிய 3 ரயில் நிலையங்களில் ரயில் பெட்டி உணவகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னை சென்ட்ரல், பெரம்பூர், பொத்தேரி ஆகிய 3 ரயில் நிலையங்களில் ரயில் பெட்டி உணவகம் அமைக்க தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. பொத்தேரி ரயில் நிலையத்தில் இந்த உணவகம் அமைக்க ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக தனியார் தொழில் முனைவர்களிடம் ஒப்பந்தம் போடப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ரயில் பெட்டி கொடுக்கப்பட்டது. அதனை அவர்கள் விருப்பம் போல் வடிவமைத்துக் கொள்ளலாம், அதே பெட்டியில் உள்பக்கத்தில் உணவகங்கள் தயாரிக்க அனுமதி, ரயில் பெட்டி உணவகம் 24 மணி நேரம் செயல்படலாம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளும் தொழில் முனைவோர்களுக்கு வழங்கப்படுகிறது.
அந்த வகையில் தற்பொழுது பொத்தேரி ரயில் பெட்டி உணவகம் தனது இறுதி கட்டப் பணிகளை எட்டியுள்ளது. இன்னும் ஒரு சில வாரங்களில் முழுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வித்தியாசமான அனுபவத்துடன் உணவு அருந்த விரும்புபவர்கள், இந்த ரயில் பெட்டி உணவகத்தை நிச்சயம் விரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொத்தேரி ரயில் பெட்டி உணவகம் - Rail Coach Restaurant Potheri
பொத்தேரியில் தயாராகி வரும் ரயில் பெட்டி உணவகம் , சைவம் மற்றும் அசைவம் கிடைக்கும் உணவகமாகவும் தயாராகி வருகிறது. அனைத்து விதமான பணிகளும் நிறைவடைந்து இறுதிக்கட்டிப் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிந்த பிறகு, பயணிகள் மற்றும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது
இந்த உணவகம் சரியாக பொத்தேரி ரயில் நிலையம், எஸ். ஆர்.எம் கல்லூரிக்கு எதிரில் அமைந்துள்ளது. திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இந்த உணவகம் அமைந்துள்ளதால், நெடுஞ்சாலையில் செல்லும் பயணிகளுக்கும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.