சென்னை அம்பத்தூர் அருகே புழல் ஏரியில் மூழ்கி நேற்று மாயமான 10 ஆம் வகுப்பு மாணவர்கள் இரண்டு பேர் 15 மணி நேரத் தேடுதலுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

Continues below advertisement

திருமுல்லைவாயல் தாமரை நகர் முதல் தெருவைச் சேர்ந்த ராஜாவின் மகன் அகில்ராம் (14), அதே பகுதியை சேர்ந்த மோகனின் மகன் தருண் ஆகாஷ் (14).  இருவரும் அம்பத்தூர் கிருஷ்ணாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை அகில்ராம், தருண் ஆகாஷ் ஆகிய இருவரும் தங்களுடன் படிக்கும் விக்னேஷ்வர், வைத்தீஸ்வரன் ஆகிய நண்பர்களுடன் முருகாம்பேடு பகுதியில் உள்ள புழல் ஏரிக்குக் குளிக்கச் சென்றுள்ளனர்.

Continues below advertisement

அப்போது ஏரியின் ஆழமான பகுதிக்குச் சென்ற அகில்ராம் மற்றும் தருண் ஆகாஷ் ஆகிய இருவரும் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த மற்ற இரு மாணவர்களும் கரைக்குத் திரும்பி, அப்பகுதி மக்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதூர் காவல் துறையினர் மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், புழல் ஏரியில் மாயமான மாணவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.தீயணைப்பு மற்றும் மீட்புப் படையைச் சேர்ந்த ஏழு நீச்சல் வீரர்கள், உள்ளூர் இளைஞர்களின்  உதவியுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். தெர்மல் இமேஜிங் கேமரா உள்ளிட்ட உபகரணங்களைக் கொண்டும் மாணவர்களைத் தேடும் பணி நடைபெற்றது.

நீண்ட நேரத் தேடுதலிலும் மாணவர்களைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில், இரண்டாவது நாளாகத் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதையடுத்து, கடலில் சிக்கியவர்களை மீட்பதில் அனுபவம் கொண்ட மெரினா மீட்புக் குழுவினர்களின் உதவியுடன் தேடுதல் பணி இன்று காலை நடைபெற்று வந்தது. 

இந்த நிலையில், சுமார் 15 மணி நேரத் தேடுதலுக்குப் பிறகு, அகில் ராம் மற்றும் தருண் ஆகாஷ் ஆகிய இரு சிறுவர்களையும், மெரினா மீட்பு குழுவினர் மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர். 

தங்களது பிள்ளைகளை இறந்த நிலையில் மீட்பு குழுவினர் ஏரி கரைக்கு கொண்டு வரும்போது ஏரிக்கரையில் மகன்களின் உடல்களை கட்டிப்பிடித்து பெற்றோர்கள் கதறி அழுதது பார்ப்போரை கண் கலங்க செய்தது. குளிக்கச் சென்ற இரண்டு பள்ளி மாணவர்களின் உயிரைப் பறித்த புழல் ஏரி சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.