புரட்டாசி மாதம் விரதம்


 

 

விரதத்துக்கு பெயர் போன புரட்டாசி மாதத்தில் பெரும்பாலான அசைவ பிரியர்கள் தங்கள் வாய்க்கு பூட்டு போட்டிருந்தனர். புரட்டாசி மாதம் முழுவதும் மும்மூர்த்திகளில் ஒருவரான பெருமாளுக்கு விரதம் இருந்து பக்தியுடன், இந்து பக்தர்கள் வழிபடுவது வழக்கம். அதேபோன்று வாழும் தோறும் வரும் சனிக்கிழமைகளில், வீடுகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவார்கள்.  நாடு முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுவதும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசித்து செல்வதும் வழக்கம். குறிப்பாக புரட்டாசி மாதங்களில்,  அசைவம் உண்ணாமல்  கடவுளுக்கு விரதம் இருந்து வந்தால் வேண்டியது நடைபெறும் என்பதும் மக்களின் நம்பிக்கையாக உள்ளது. பெருமாளை இஷ்ட தெய்வமாக வணங்கும்,  மக்கள் பாரபட்சம் இன்றி புரட்டாசி மாதத்தில் எந்தவித அசைவ உணவுகளும் உண்ணுவது கிடையாது. முட்டை உள்ளிட்ட அசைவ பொருட்களை கூட உண்ணாமல் , சைவ உணவுகளை மட்டுமே  சாப்பிட்டு கடவுளுக்கு  விரதம் இருந்து  பூஜை செய்து வருகின்றனர்

 


ஆர்வத்துடன் மீன்களை விலை பேசி, வாங்கிச் செல்லும் மக்கள் . இடம் :காஞ்சிபுரம் மீன் சந்தை


 

 

முடிந்த புரட்டாசி


 

இந்த நிலையில் புரட்டாசி மாதம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை இன்று என்பதால் அசைவ பிரியர்கள் கறி மற்றும் மீன் ஆகிய கடைகளில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். அதிகாலை முதலே வியாபாரிகள், பொதுமக்கள் திரண்டதால் காஞ்சிபுரம் மீன் சந்தையில் கடும் கூட்டம் காணப்பட்டது. அவர்கள் தாங்கள் விரும்பிய மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.காஞ்சிபுரம் பொன்னேரி கரை பகுதியில் செயல்பட்டு வரும் மீன், இறைச்சி கடைகளில் கடந்த 5 வாரங்களாக விற்பனை குறைவாக நடந்த நிலையில் கடைகள் வெறிச்சோடி கிடந்தது

 


விற்பனைக்காக காத்திருக்கும் கடல் மீன்கள்


 

 

அதிகாலையிலேயே கையில் பையுடன் அசைவ பிரியர்கள்

 

 

இன்று ஏராளமான அசைவ பிரியர்கள் , நாவின் சுவையை அடக்க முடியாமல் ஞாயிற்றுக்கிழமையான இன்று காலையிலேயே காஞ்சிபுரம் பொன்னேரி கரை மீன் மார்க்கெட்,தர்கா பகுதி இறைச்சி கடைகளில் குவிந்து தங்களுக்கு தேவையான மீன், இறைச்சி வ வாங்கி செல்ல  தொடங்கி உள்ளனர். 5 வாரங்களாக விற்பனை மந்தமாக இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இன்று ஏராளமான அசைவ பிரியர்கள் காலை நேரத்திலேயே மீன்கள்,கோழிகறி ஆடுக்கறி முட்டை உள்ளிட்ட அசைவ வகை பொருட்களை வாங்கிச் செல்ல குவிந்து வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

 


இறைச்சி கடைகளில் குவிந்து தங்களுக்கு தேவையான மீன், இறைச்சி வாங்கி செல்ல தொடங்கி உள்ளனர்


 

வார நாட்களிலேயே புரட்டாசி மாதம் முடிவடைந்த நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூடுதலாக பொதுமக்கள் வந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். புரட்டாசி மாதம் முடிவடைந்த நிலையிலும் , மீன்கள் மற்றும் கறிகளின் விலைகள் பெரிய அளவில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.