சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் மிக முக்கியமாக 5 ஏரிகள் உள்ளன பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கம். இந்த ஏரிகள் வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கும் நீரை மட்டுமே நம்பியுள்ளது. கடந்தாண்டு வடகிழக்கு பருவமழையால் மேற்கண்ட ஏரிகளில் நீர் இருப்பு உயர்ந்த நிலையில், கடந்த செப்டம்பர் முதல் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், ஏரிகளின் நீர் மட்டம் மேலும் உயர்ந்து வருகிறது.

 

 

 

புழல்  ஏரி

 

மொத்தம் 21.20 அடி நீர்மட்டம் கொண்ட புழல் ஏரியில் தற்போது 19.30 அடி அளவிற்கு தண்ணீர் உள்ளது. காலை 6 மணி நிலவரப்படி புழல் ஏரிக்கு நீர்வரத்து 1487 கன அடியாக உள்ளது. புழல் ஏரியிலிருந்து வினாடிக்கு 500 கனஅடி உபரி திறக்கப்படும் என அறிவிப்பு. நாரவாரி குப்பம், தண்டல்கழனி, வட பெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

 



 

செம்பரம்பாக்கம் ஏரி 

 

 

செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த நீர்மட்ட உயரம் 24 அடியாகும் - தற்போது நீர்மட்டம் 21.30 அடியாக உள்ளது

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 600 கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், உபரிநீர் திறக்கப்பட உள்ளது. சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை உள்ளிட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் அடையாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ள ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் பொது மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கு அனைத்துவிதமான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

 

சென்னை மழை

 

 

இரவு முதல் பெய்து வரும் கனமழையால் சென்னை சாலைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். சென்னையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

காஞ்சிபுரம் 

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு மரங்களும் இடங்களில் கனமழை பெய்துள்ளது காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்தரமேரூர், குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 120 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.