தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக பரவலாக பெய்து வந்த மழையின் தாக்கம் நேற்று முதல் தீவிரம் அடைந்துள்ளது. சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் விடிய, விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த நிலையில், சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது,


“ சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை வரை அடுத்த மூன்று மணிநேரத்திற்கு பெய்யும்.





அதேபோல, இடி, மின்னலுடன் கூடிய கனமழை சேலம், தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரத்தில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு பெய்ய உள்ளது. மேலும், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை அடுத்த மூன்று மணிநேரத்திற்கு பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.”


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக, சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோயம்பேடு, நுங்கம்பாக்கம், வடபழனி, பாரிமுனை, தி.நகர், கிண்டி, அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போலத் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.




மேலும், சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், ஏரியின் மொத்த நீர்மட்டமான 24 அடியில் 21 அடி நிரம்பியுள்ளது. ஏரிக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏரியின் உபரிநீரை திறந்து விடுவது குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். ஏற்கனவே நள்ளிரவு முதல் சென்னையில் மழை கொட்டித்தீர்த்து வரும் நிலையில், மேலும் மூன்று மணிநேரத்திற்கு கனமழை பெய்யும் என்ற அறிவிப்பு மக்களை மேலும் கவலையடைச் செய்துள்ளது.






 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண