கள்ளக்குறிச்சி மாவட்டம் , கீழ்குப்பம் காவல் நிலைய எல்லைக் குட்டப்பட்ட கூகையூர் கிராமத்தை சேர்ந்தவர் பொற்செழியன் (60 ) இவர் எலெக்ட்ரோ-ஹோமியோபதி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைக்கான இளங்கலை பட்டத்தை படித்து முடித்து தனது சொந்த ஊரான கூகையூரில்  அய்யப்பன் கிளினிக் என்ற பெயரில் ஹோமியோபதி கிளினிக்கை கடந்த 28 ஆண்டுகளாக நடத்தி வருகின்றார் .


சாப்பாடு மீது அதிக நாட்டம் கொண்ட இவர் தனது குடும்பத்தார் உதவியுடன்  'சாப்பாட்டு ராமன்' என்ற  யூடியூப் சேனலை தொடங்கி நடத்தி வருகிறார் .ஒரே நேரத்தில் கிலோ கணக்கில் உணவு உண்டு அதை தன் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேலஞ்ச் செய்து அதையே வீடியோவாக தனது சேனலில் அப்லோட் செய்து மிகவும்  பிரபலமானவர் சாப்பாட்டு ராமன் பொற்செழியன்.  கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு தொடங்கிய அவரது  யூடியூப் சேனலுக்கு தற்பொழுது 1 .04  மில்லியன் அதாவது 10 லட்சத்து 40 ஆயிரம் சந்தாதாரர்கள் உள்ளனர் .



இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதார துறைக்கு பொற்செழியன் தனது ஹோமியோபதி கிளினிக்கில் சட்டவிரோதமாக ஆங்கில மருத்துவம் செய்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது . இதனை தொடர்ந்து அங்கு ஆய்வு நடத்திய சுகாதார துறையினர் அவர் சட்டவிரோதமாக மருத்துவம் பார்த்ததை உறுதிசெய்து உடனடியாக கீழ்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் .


இது தொடர்பாக ABP நாடு செய்தி குழுமத்திடம் பேசிய நயினார்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் அபிநயா சுப்பிரமணியம் , ‛‛கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் சதிஷ் குமாருககு  பொற்செழியன் தனது 'அய்யப்பன் கிளினிக்கில்' சட்ட விரோதமாக ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. 



அதன் பேரில் கச்சிராயப்பாளையம் ஒன்றிய மருத்துவ அலுவலர் மதியழகன் தலைமையிலான மருத்துவ குழுவினர் அவரது கிளினிக்கை நேற்று ஆய்வு செய்தோம் . நாங்கள் அவரது கிளினிக்கு சென்ற பொது , சளி, காய்சசல் உள்ளிட்ட தொந்தரவால் பாதிக்கப்பட்ட முகேஷ் குமார் என்ற 5 வயது சிறுவனுக்கு பொற்செழியன் ஆங்கில மருத்துவ வகை ஊசியை செலுத்திக் கொண்டு இருந்தார் .



உடனடியாக கீழ்குப்பம் போலீஸ்க்கு தகவல் தெரிவித்து பொற்செழியன் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க புகார் செய்துள்ளோம். மேலும் அவரது கிளினிக்கில் இருந்து ஊசிகள் , தையல் போட பயன்படுத்தும் மருத்துவ உபகரணங்கள்  , அடிபட்ட காயங்களுக்கு பயன்படுத்தும் மருந்துகள் , கத்திரிக்கோல் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளோம் "என்று தெரிவித்தார் அபிநயா.


மேலும் நம்மிடம் பேசிய கீழ்குப்பம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஏழுமலை , ‛‛குற்றவாளி பொற்செழியன் மீது இந்திய தண்டனை சட்டம் 420  மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம்பிரிவு 15 (3) வழக்கு பதிவு செய்து மாஜிஸ்டீரேட் முன்னிலையில் நிறுத்தினோம் . ஆனால் அவரது வழக்கறிஞர் அவரது வயது மூப்பு மற்றும் உடல் நிலை கோளாறுகளை கரணம் காட்டி அவரை பிணையில் விடுவிக்குமாறு , மனுசெய்ததின் பேரில்  பொற்செழினை சொந்த பிணையில் விடுதலை  செய்தனர் ,’’ என்றார்.