சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவது மட்டுமல்ல வெள்ளம், புயல், மழை என எப்போதெல்லாம் பேரிடர்கள் வருகிறதோ அப்போதெல்லாம் கள அதிகாரிகளோடு காவல்துறையினரும் கைகோர்த்து செயல்பட்டு பேரிடர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


இன்று பெய்த கன மழையில் அண்ணாநகர் பகுதியில் மரம் மேலே விழுந்து இறந்துபோய்விட்டார் என்று நினைத்த இளைஞருக்கு உயிர் இருக்கிறது என்று தெரிய வந்ததும் ஒரு நாளிகை கூட தாமதிக்காமல் அவரை தன் தோள் மீது சுமந்து சென்று காப்பாற்றி இருக்கிறார் டிபி சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி.


ராஜேஸ்வரிக்கு ஏற்கனவே மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு இருக்கும் நிலையில், பல்வேறு சமூக பொறுப்புணர்வு கொண்ட காரியங்களையும் முன் நின்று நடத்தி காட்டியிருக்கிறார். அந்த வகையில் இன்று உயிருக்கு போராடிய இளைஞரை தன் தோளிலேயே தூக்கிச் சென்று அவர் காப்பாற்றியதை பலரும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.


சமூக வலைதளங்களில் ராஜேஸ்வரிக்கு வாழ்த்தும் பாராட்டும் குவிந்துவரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே அவரது ட்விட்டர் பக்கத்தில் காவல் ஆய்வாளர் படத்தை பகிர்ந்து பாராட்டு தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், மழை வெள்ள மீட்பு பணியில் இயங்கிக்கொண்டிருந்த ஆய்வாளர் ராஜேஸ்வரியிடம் பேசினோம்.







  • போலீஸ் இன்ஸ்பெக்டரான நீங்க சொன்னால், காயம்பட்ட அந்த இளைஞரை தூக்கிச் செல்ல பலரும் இருந்தபோது, ஏன் நீங்களே இறங்கி அவரை தோளில் சுமந்து காப்பாற்றினீர்கள்..?


நான் மத்தவங்க மாதிரி இருக்க விரும்பவில்லை. உதவியோ நடவடிக்கையோ நானே நேரடியாக எடுக்க வேண்டும் என நினைப்பேன். அதோடு, காயம்பட்டு கிடந்த இளைஞரை மிது சேறும், சகதியும் பட்டு துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தது. அப்போது நான் போய் என் கூட இருக்கும் போலீசாரை தூக்கு என்று சொல்வதில் நியாமில்லை. அது சரியாகவும் இருக்காது. அதனால்தான், நானே இறங்கி அவரை தூக்கினேன். நான் இப்படி செய்வதால், என்னோடு இருக்கும் போலீசாரோ, அல்லது வேறு பகுதியில் இருக்கும் காவலர்களோ அவர்களே இறங்கி எதையும் செய்ய வேண்டும் உதவ வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்படும். அதனால்தான் நானே அவரை என் தோளில் தூக்கி சுமந்து மீட்டேன். எனக்கு அந்த சமயம் அவர் உயிரை காப்பற்ற வேண்டும் என்றுதான் தோன்றியதே தவிர, வேறு யாரையாவது தூக்க சொல்ல வேண்டும் என்று தோன்றவில்லை.



  • உங்களுடைய இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பெரிய அளவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினே உங்களது புகைப்படத்தை பகிர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியிருக்கிறாரே..?


ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. முதல்வரே பாராட்டிட்டாங்க அப்டின்னா அதை விட பெருமை என்னை போன்ற போலீசாருக்கு என்ன இருக்கிறது. பெரிய சந்தோஷம். எவ்வளவோ நாங்க செஞ்சாலும் அதற்கு பாராட்டு கிடைப்பது என்பது அரிது. ஆனால், இந்த விஷயத்தில் பிறரும் முதல்வரும் நேரடியாக பாராட்டியிருக்கிறார்கள் என்றால் அது ரொம்ப பெருமை இருக்கு.



  • இந்த மாதிரி ஒரு பேரிடர் காலக்கட்டத்துல போலீசார் எப்படி செயல்படனும்னு நெனக்கிறீங்க..?


பொதுமக்களுக்கு ஒரு உதவி என்றால் உடனே இறங்கி வேலை செய்யனும். அது என்ன ரிஸ்கா இருந்தாலும் எடுக்கனும். பாதிக்கப்பட்டவர்கள் யார் ஏழையா பணக்காரனா என்றெல்லாம் பார்க்கக் கூடாது. அவங்களுக்கு உதவனும் அவ்ளோதான்.