சொத்து வரி - நிர்வாகத் துறை அறிவிப்பு
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் சொத்து வரி பெயர் மாற்றக் கட்டணத்தை குடியிருப்புக்கு ரூ.500 , இதர பயன்பாட்டுக்கு ரூ.1000 என நிர்ணயித்து வசூலிக்க நகராட்சி நிர்வாகத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், சொத்துகள் பரிமாற்றத்துக்குப் பின் சொத்து வரி பெயர் மாற்றத்துக்கு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் தனித் தனியாக கட்டணம் வசூலித்து வந்தன.
இது தொடர்பாக அரசின் கவனத்துக்கு வந்த நிலையில் , தொகையை ஒரே சீராக நிர்ணயிப்பது தொடர்பாக கடந்த 16-ம் தேதி நகராட்சி நிர்வாகத் துறையால் அரசாணை பிறப்பிக்கப்பட்டு , நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு, நகராட்சி நிர்வாக இயக்குநர் மதுசூதன் ரெட்டி அனுப்பியுள்ள சுற்றறிக்கை ;
மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் சொத்துவரியாக குடியிருப்பு பயன்பாட்டுக்கு ரூ.500 மற்றும் பிற பயன்பாடுகளுக்கு ரூ.1000 செலுத்த வேண்டும். மேலும் , குடிநீர் கட்டண விதிப்பு
எண்களுக்கு பெயர் மாற்றக் கட்டணம் எக் காரணம் கொண்டும் வசூலிக்கக் கூடாது. சொத்து வரி பெயர் மாற்றம் செய்யப்படும் போது சம்பந்தப்பட்ட சொத்து வரி விதிப்பு எண்களுக்குரிய குடிநீர் கட்டணம் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு எண்களையும் உரிய உரிமையாளர் பெயருக்கு அதே விண்ணப்ப அடிப்படையில் உடனே மாற்றம் செய்ய வேண்டும்.
சொத்து வரி பெயர் மாற்றம் கோரும் மனுக்கள் மீது நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டும் வசூலித்து பெயர் மாற்றம் செய்து , முடிவுற்ற அரையாண்டில் அவர்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையையும் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.