டெண்டர்


சென்னையில் தனியார் நகரப் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்க அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநகர போக்குவரத்து கழகமே, தனியாரிடமிருந்து பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் பெற்று இயக்க முடிவு என கூறப்படுகிறது. முதற்கட்டமாக 2023 ஆம் ஆண்டில் 500 தனியார் பேருந்துகள், சென்னையில் இயக்கப்படவுள்ளது. அதனை தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டில் மேலும் 500 இயக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பேருந்து ஓட்டுநரை தனியார் நிறுவனமும், நடத்துநரை மாநகர போக்குவரத்து கழகமும் நியமிக்கும் என தகவல் வெளியாகியிருந்தது.


அமைச்சர் விளக்கம்


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு பேருந்து ஊழியர்கள் போராட்டம் நடத்தப்படுவதாக அறிவித்தனர். இந்நிலையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இது பற்றி விளக்கம் அளித்துள்ளார்.


செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, "கூடுதலான பேருந்துகளை இயக்கவே தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட திட்டமிடப்பட்டது. மக்கள் தொகை பெருகி வருவதால் கூடுதலாக பேருந்துகளை இயக்க சென்னையில் தனியார் பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும்,  தனியார் பேருந்துகள் இயங்கினாலும் மாணவர்களுக்கான இலவச பஸ்பாஸ் திட்டமும், மகளிருக்கான சலுகையும் பாதிக்கப்படாது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.


”சென்னையில்  தற்போது ஓடிக் கொண்டிருக்கும் பேருந்துகள் நிறுத்தப்படும் என்ற தகவல் தவறானது எனவும் தற்போது விடப்பட்டுள்ள டெண்டர் தனியார் பேருந்துகளை இயக்குவதற்கான டெண்டர் அல்ல என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மேலும், மாநகரப் பேருந்துகளை தனியார்மயம் என்ற  பேச்சுக்கே இடமில்லை" என்று தெரிவித்தார்.


”பேருந்துகள் நிறுத்தப்படும் என்ற தகவல் தவறானது ”


இதனை தொடர்ந்து பேசிய அவர், ”அதிமுக ஆட்சியில் தான் தனியார் பேருந்து தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டது. சென்னையில் Gross cost contract (GCC) முறையில் 500 பேருந்துகளை இயக்கலாம் என உலக வங்கி வழிகாட்டுதல் வெளியிட்டது. உலக வங்கி அளித்துள்ள கருத்துரை குறித்து ஆய்வு நடத்தவே டெண்டர் விடப்பட்டுள்ளது.  சென்னையில் எந்த வழித்தடத்தில் பேருந்துகள் பற்றாக்குறை இருக்கிறது என்பதை கண்டறிந்து அந்த வழித்தடத்தில் மட்டும் தனியார் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.


மேலும், ”தனியார் பேருந்துகளை இயக்குவது குறித்த சாதியக்கூறுகளுக்கான ஆய்வறிக்கை வந்து பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பேருந்துகளை இயக்குவது குறித்தான ஆய்வறிக்கை 3 மாதங்களில் தாக்கல் செய்யப்படும். மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் தான் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றார். மேலும், சென்னையில் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் பேருந்துகள் நிறுத்தப்படும் என்ற தகவல் தவறானது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 




மேலும் படிக்க


MK Stalin Meeting: ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு தேவை இருக்கு.. இது உங்களோட பொறுப்புதான்! ஆட்சியர்களுக்கு உத்தரவிட்ட முதல்வர்!