தமிழ், தமிழர் நலன், பெண் விடுதலை, தீண்டாமை ஒழிப்பு போன்றவற்றிற்காக ஒரு நூற்றண்டிற்கு முன்னரே தன் கவிதையின் மூலம் முழங்கியவர் தேசிய கவி பாரதியார். இவர், ஒரு கவிஞனாக மட்டும் இல்லாமல் ஒரு சிறந்த எழுத்தாளராகவும், நல்ல பத்திரிக்கையாசிரிராகவும் செயல்பட்டு நாட்டு மக்கள் மத்தியில் சுதந்திர உணர்வை விதைத்தார்.
“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்று பெண்ணுரிமைக்காக முழங்கிய அதே சமயத்தில், “சாதிகள் இல்லையடி பாப்பா; குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” என்று தீண்டாமை ஒழிப்பு குறித்து போர்க்குரல் எழுப்பினார்.
ஆளுநர் மாளிகையில் திறக்கப்பட்ட உள்ள பாரதியாரின் திருவருவப்படம்:
நூற்றாண்டு கடந்தும் பாரதியாரின் புகழ் ஓங்கி ஒலித்து வரும் நிலையில், அவருக்கு மேலும் சிறப்பு செய்யும் வகையில், சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் பாரதியாரின் திருவுருவப்படம் திறக்கப்பட உள்ளது. இந்த திருவுருவப்படத்தை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாளை (ஆகஸ்ட் 6ஆம் தேதி) திறந்து வைக்கிறார்.
ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலுக்கு பாரதியார் மண்டபம் என்றும் பெயர் மாற்றப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.
நூற்றாண்டு கடந்த பாரதியாரின் புகழ்:
தமிழ்நாட்டில் பிறந்திருந்தாலும் பாரதியார் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வந்திருக்கிறார். சில ஆண்டுகள் உத்தரப்பிரதேச மாநிலம் காசியில் தங்கியிருந்தார். அங்குதான் அவர் இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை கற்றறிந்தார். இதை நினைவுகூரும் வகையில், தமிழக அரசு சார்பில், காசியில் பாரதியார் வாழ்ந்த இடத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என சில மாதங்களுக்கு முன்பு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
காசியில் பாரதியார் வாழ்ந்த அந்த இல்லத்தில் இப்போது அவரின் உறவினர்கள் வாழ்ந்துக் கொண்டிருந்தனர். அவர்களிடம் உரிய அனுமதி பெற்று, பாரதியார் தங்கி இருந்த இடத்தில் 2.5 அடி உயரம் கொண்ட மார்பளவு பாரதியார் சிலை 18 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது. காசியில் அவர் வாழ்ந்த இல்லத்தில் மகாகவி பாரதியாரின் மார்பளவு சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக சமீபத்தில் திறந்து வைத்து, பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்பு மலரையும் வெளியிட்டார்.
வரலாறு:
மகாகவி பாரதியார், சின்னசாமி ஐயருக்கும், லட்சுமி அம்மாளுக்கும், 1882 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி , திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் மகனாக பிறந்தார். பாரதியாருக்கு அவது பெற்றோரோர் இட்ட பெயர் சுப்பிரமணி.
5 வயதிலேயே தன் தாயை இழந்த பாரதியார், ஏழு வயது முதலே கவிதையில் சிறந்து விளங்க தொடங்கினார். இவருக்கு 11 வயது இருக்கும்போது இவரது கவி பாடும் ஆற்றலையும் புலமையையும் பாராட்டி இவருக்கு பாரதி என்ற பட்டத்தை வழங்கினார் எட்டயபுர மன்னர். அன்றில் இருந்து இவர் பெயர் சுப்பிரமணிய பாரதியார் என்றானது.