சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் தனியார் பயணிகள் விமானம், நடு வானில் பறந்து கொண்டு இருந்தபோது, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீர் பிரசவ வலி ஏற்பட்டு, விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்தபோதே, அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. 


 


 


 


திடீரென பிரசவ வலி


 


சிங்கப்பூரில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் கடந்த 22ஆம் தேதி அதிகாலை 179 பயணிகளுடன், சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது. இந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நடு வானில் பறந்து கொண்டு இருந்தது. அப்போது அந்த விமானத்தில், குடும்பத்தோடு பயணித்துக் கொண்டு இருந்த, ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த தீப்திசரிசு வீர வெங்கட்ராமன் (28) என்ற நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு, திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. 


 


 


பரபரப்பான விமானம்


 


 


இதை அடுத்து தீப்தியின் குடும்பத்தினர், விமான பணிப்பெண்களிடம் அவசரமாக தெரிவித்தனர். இதை எடுத்து விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதோடு விமான பணிப்பெண்கள் தலைமை விமானிக்கு, தகவல் தெரிவித்தனர். இதை எடுத்து விமானி உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாக தகவல் தெரிவித்தார். அதோடு விமானம் எந்தவித குலுக்கள் அதிர்வுகள் இல்லாமல் ஜாக்கிரதியாக இயக்கினர்.


 


 


 


திரை தடுப்பை உருவாக்கிய பணிப்பெண்கள் 


 


 


விமான பணிப்பெண்கள் துரிதமாக செயல்பட்டு, அந்த விமானத்தில் பயணித்த, தீப்தி இருந்த பகுதியில் உள்ள ஆண் பயணிகள் அனைவரையும், வேறு இடத்திற்கு மாற்றி விட்டு, அவசரமாக விமானத்துக்குள் ஒரு திரை தடுப்பை அமைத்து, விமான பணிப்பெண்கள், அங்கிருந்த ஆண் செவிலியர் உதவியுடன் சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்துள்ளது.


 


 


 


தயார் நிலையில் இருந்த குழு 


 


இந்தநிலையில் இந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அதிகாலை 4.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதற்கிடையே சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி ஏற்கனவே தகவல் தெரிவித்து இருந்ததால், விமான நிலைய மருத்துவ குழுவினர், சென்னை விமான நிலைய ஓடுபாதையில் விமானம் வந்து தரையிறங்கும் இடத்தில் தயார் நிலையில் இருந்தனர்.


 


 


விமானம் சென்னையில் தரையிறங்கியதும், உடனடியாக மருத்துவக் குழுவினர் விமானத்துக்குள் ஏறி தாயையும் குழந்தையும் பரிசோதித்தனர். அதோடு தாயையும் குழந்தையும் விமானத்திலிருந்து இறக்கி, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள பிரபலமான தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.


 


 


குடும்பத்தினர் மகிழ்ச்சி


 


அதன் பின்பு விமானத்தில் உள்ள மற்ற பயணிகள் விமானத்தில் இருந்து கீழே இறங்க அனுமதித்தனர். இதனால் தீப்தியின் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியுடன், விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு சாக்லேட் வழங்கி மகிழ்ந்தனர். தீப்தி சரசு குடும்பத்தினருடன், சுற்றுலா பயணிகளாக சிங்கப்பூர் சென்று விட்டு திரும்பி வரும்போது இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


 


ஆண் செவிலியருக்கு பாராட்டு


 


 


இந்தநிலையில் பிரசவம் பார்த்த ஆண் செவிலியர் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன . செங்கல்பட்டு மாவட்டம் வளர்கின்ற பகுதியை சேர்ந்த கண்ணன் என்ற செவிலியர் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். விடுமுறை முன்னிட்டு சொந்த ஊர் திரும்பிய பொழுது கண்ணன், விமானத்தில் வேறு மருத்துவர்கள் இல்லாத நிலையில், முதலுதவி சிகிச்சை பெட்டியில் இருந்த பொருட்களை வைத்து பிரசவம் பார்த்து அசத்தியுள்ளார் ‌ . பிரசவம் பார்த்த ஆண் செவிலியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன ‌