சீமானுக்கு எதிரான புகார்கள்:


சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலின் போது முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய பாடல் பாடி பிரச்சாரம் செய்ததாகவும், அப்போது சண்டாளன் என்ற வார்த்தையை பயன்படுத்தியதாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார்கள் எழுந்தது. குறிப்பாக சீமான் கூறிய இந்த வார்த்தை சமூக வலைதலங்களிலும், திமுக தரப்பிலும் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான் தமிழகத்தில் உள்ள  பல்வேறு காவல் நிலையங்களில் நாம் தமிழர் கட்சி சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக  சீமானுக்கு எதிராக பட்டாபிராம் பகுதியை சேர்ந்த அஜேஸ் என்பவர் கடந்த 16.07.24 அன்று காவல் நிலையத்தில் புகாரளித்தார். ஆனால் அந்த புகார் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சொல்லப்பட்ட நிலையில் அது தொடர்பான புகாரை எஸ்.சி.எஸ்.டி ஆணையத்திற்கும் அஜேஸ் அனுப்பியுள்ளார்.


தேசிய எஸ்.சி.எஸ்.டி ஆணையம் அதிரடி உத்தரவு:


அதில் வன்கொடுமை சம்பந்தப்பட்ட வழக்குகளில் பிரிவு 18 A படி முன் விசாரணை எதுவும் தேவையில்லை என்று சட்டம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. மனுதாரர் கொடுத்த புகாரை பெற்றுக்கொண்டகாவல் ஆய்வாளர் சிஎஸ் ஆர் மட்டும் கொடுத்துள்ளார். வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இருந்தும் வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பது ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கானது தொடர்ச்சியாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த வழக்கின் உண்மை தன்மையை கண்டறிந்து இந்த வார்த்தையை பயன்படுத்திய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆவடி காவல் ஆணையத்திற்கு இந்த உத்தரவை தேசிய எஸ்.சி.எஸ்.டி ஆணையம் பிறப்பித்துள்ளது.


இப்படி ஒரு சமூகம் இருப்பதே எனக்கு தெரியாது:


இதுகுறித்து ஏற்கனவே செய்தியாளர் சந்திப்பில் சீமான் பேசியிருந்தார். அப்போது அவர் கூறும் பொழுது, அந்த பாட்டை எழுதி, மெட்டமைத்தது அ.தி.மு.க. தான். ஜெயலலிதா இருந்தபோது பல நூற்றுக்கணக்கான மேடையில் இந்த பாடல் பாடப்பட்டுள்ளது. இதே கருத்து சொல்லப்பட்டுள்ளது. அன்றெல்லாம் இவர்களுக்கு வருத்தமோ, கோபமோ தெரியவில்லை. திருப்பி நாங்கள் பாடும்போது அப்படி ஆகிவிட்டது, இப்படி ஆகிவிட்டது என்று கூறுகிறார்கள். அவதூறு பேசுவது, அசிங்கமான அரசியல் பேசுவதற்கு ஆதித்தாய் தி.மு.க. ஒவ்வொரு தலைவர்களை பற்றி, கருணாநிதி பேசியதே இருக்கிறது. நாகரிக அரசியல் பற்றி, கண்ணியமான அரசியல் பற்றி கற்றுக்கொடுப்பதற்கு, அடுத்தவர்களுக்கு கற்றுத் தருவதற்கு துளியளவும் தகுதியற்ற கட்சி தமிழ்நாட்டில் இருக்கிறது என்றால் அது தி.மு.க தான். கிராமங்களில் சண்டாளன் என்பது ஒரு பேச்சுவழக்கு ஆகும். படங்களில் கூட சண்டாளி என்று பாடல் வரிகள் கூட உள்ளது. நான் எடுத்த பாஞ்சாலங்குறிச்சி படத்தில் சண்டாளா என்று வடிவேலு நடித்த காட்சியில் இருந்தது. அப்போது எனக்கு உண்மையிலே தெரியாது. படம்  வெளியான பிறகு எனக்கு கடிதம் வந்தது. அப்போது தான் எனக்கு இந்த பெயரில் ஒரு சமூகம் இருக்கிறது என்று தெரியும். அதன்பின்பு, நாங்கள் அதை பயன்படுத்தவில்லை என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.