பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக, பொதுமக்கள் பெருமளவு சென்னையில் இருந்து விமானங்களில் புறப்பட்டு செல்வதால், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதையடுத்து மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி, சேலம், திருவனந்தபுரம் விமான கட்டணங்கள் பலமடங்கு உயர்வு. தூத்துக்குடி, சேலம் விமானங்களில், இன்று அனைத்து டிக்கெட்களும் ஃபுல் ஆகிவிட்டன.
பொங்கல் பண்டிகை
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை, தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட இருப்பதால், சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், பொங்கல் பண்டிகையை தங்களுடைய சொந்த ஊர்களில் குடும்பத்தாருடன் சேர்ந்து கொண்டாடு வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதை அடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் வெளியூர் மக்கள், ஒட்டுமொத்தமாக, தங்களுடைய ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்ல தொடங்கிவிட்டனர்.
பல மடங்கு கட்டண உயர்வு
அவர்களுக்கு வசதியாக தொடர் விடுமுறைகளும் வருகின்றன. செவ்வாய்க்கிழமை பொங்கல் பண்டிகை என்றாலும், முன்னதாகவே நேற்றிலிருந்து, தங்களுடைய சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்ல தொடங்கி விட்டனர். ஆனால் ரயில்களில் அனைத்து டிக்கெட்களும் ஃபுல் ஆகிவிட்டதால், ரயில்களில் இடம் இல்லை. அதைப்போல் அரசு பேருந்துகளிலும் பயணிகள் போட்டி போட்டுக் கொண்டு பயணிப்பதால், அரசு பேருந்துகளிலும் டிக்கெட்டுகள் நிரம்பி வழிகிறது. மேலும் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம், பல மடங்கு அதிகமாக வசூலிக்கப்படுவதாக பயணிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இதை அடுத்து பயணிகள், விமானங்களில் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்ல தொடங்கியுள்ளனர். இதனால் நேற்று வெள்ளிக்கிழமை மாலையில் இருந்து, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம், அதிகமாக இருக்கிறது. இன்று சனிக்கிழமை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம், அதைவிட அதிகமாக அலைமோதுகிறது.
இதையடுத்து வழக்கம் போல், சென்னை விமான நிலையத்தில், விமான டிக்கெட்டுகள் கட்டணங்கள் பல மடங்கு, ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளன.
அடேங்கப்பா வாயை பிளக்க வைக்கும் கட்டணம்
சென்னை- மதுரை வழக்கமான கட்டணம் ரூ.3,999 இன்றைய கட்டணம் ரூ.17,645.
சென்னை- திருச்சி வழக்கமான கட்டணம் ரூ.2,199.இன்றைய கட்டணம் ரூ.14,337.
சென்னை- கோவை வழக்கமான கட்டணம் ரூ.3,485. இன்றைய கட்டணம் ரூ.16,647.
சென்னை- தூத்துக்குடி வழக்கமான கட்டணம் ரூ.4,199. இப்போதைய கட்டணம் ரூ.12,866.
சென்னை- திருவனந்தபுரம் வழக்கமான கட்டணம் ரூ.3,296.இன்றைய கட்டணம் ரூ.17,771.
சென்னை- சேலம் வழக்கமான கட்டணம் ரூ.2,799.இப்போதைய கட்டணம் ரூ.9,579.
இதில் சென்னை- தூத்துக்குடி, சென்னை- சேலம் இடையே, இன்று சனிக்கிழமை அனைத்து டிக்கெட்டுகளும் நிரம்பி உள்ளன. எனவே நாளை ஞாயிறு விமானத்தில் தான் ஒரு சில டிக்கெட்டுகள் உள்ளன. இதனால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள், சென்னை- திருவனந்தபுரம் விமானங்களில் பயணிக்கின்றனர். இதனால் சென்னை- திருவனந்தபுரம் விமானத்திலும் டிக்கெட் கட்டணம், சுமார் 5 மடங்குகளுக்கு மேல் உயர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.