தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல இடங்களில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.


சமத்துவ பொங்கல் விழா


 

செங்கல்பட்டு ( Chengalpattu News ) : செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த  படூர் ஊராட்சி மன்றம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் மூன்று மண் பானையில் பொங்கல் வைத்து விழாவை ஊராட்சி மன்ற தலைவர் தாரா சுதாகர் துவக்கி வைத்தார். இதில் சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என அனைவருக்கும் ஏராளமான போட்டிகள் நடைபெற்றது. 



இளவட்ட கல் தூக்கும் நிகழ்ச்சி


 

தென்மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீர விளையாட்டுகள் நடத்தப்படுவதை போல் படூரிலும் இளவட்ட கல் தூக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இதுவரை நடைபெறாத பெண்கள் இளவட்ட கல் தூக்கும் போட்டியை படூரில் நடத்தி பெண்களின் வீரத்தை வெளிக்கொண்டு வந்தனர்.  இதில் கலந்து கொண்ட பெண்கள் சுமார் 75 கிலோ எடையுள்ள இளவட்ட கல்லை அசால்ட்டாக தூக்கி வீசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர். 



 

பல ஆண்கள் கலந்து கொண்ட போதிலும்

 

இளவட்ட கல்லை தூக்க ஆண்கள் கூட்டம் முன்வராத நிலையில் பெண்கள் நான் நீ என போட்டி போட்டுக்கொண்டு முன்வந்து இளவட்ட கல்லை சிலர் தூக்க முயற்சித்தனர். சிலர் அசால்ட்டாக தூக்கி வீசினர். அதை தொடர்ந்து ஆண்களுக்கான 150 கிலோ எடையுள்ள இளவட்ட கல்லை தூக்கும் போட்டியில் பல ஆண்கள் கலந்து கொண்ட போதிலும் ஒருவரால் கூட அந்த இளவட்ட கல்லை தூக்க முடியாமல் போனது. 



6501 ரூபாய் பரிசு தொகை


 

ஆண்கள் இளவட்ட கல்லை தூக்கினால் ரூபாய் 2000 பரிசு தொகை என முதலில் அறிவித்த நிலையில், இறுதியில் 6501 ரூபாய் பரிசு தொகை என்று அறிவித்தும் ஒருவர் கூட தூக்கவில்லை. இதேபோல் டாடா ஏஸ் வாகனத்தை கயிறு கட்டி பல்லால் இழுக்கும்போட்டியில் ஆண்கள் கலந்து கொண்டு சாகசம் செய்தனர். இதேபோல் சிறுவர்களுக்கான இட்லி சப்பிடும் போட்டி பொதுமக்கள் மத்தியில் வெகு ஆர்வமாகவும் உற்சாகமாகவும் நடைபெற்றது. 

 


75 கிலோ எடையுள்ள இளவட்ட கல்லை பெண்கள் அசால்ட்டாக தூக்கி அசத்தினர்


18 வகையான போட்டிகள் 


 

அதை தொடர்ந்து உறியடி போட்டி, கயிறு இழுத்தல், மியூசிக்கல் சேர், மெதுவாக சைக்கிள் ஓட்டுவது உள்ளிட்ட 18 வகையான போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கினர். இளவட்டக்கல் தூக்கிய இரண்டு பெண்களுக்கு தலா 3 ஆயிரம் மற்றும் ஒரு பாத்திரம் பரிசாகவும், கயிற்றை பல்லால் கடித்து வாகனத்தை இழுத்த நபருக்கு தலா ஆயிரம் உள்ளிட்ட ரொக்க பரிசினை ஊராட்சி மன்ற தலைவர் தாரா சுதாகர் வழங்கினார். 

 


75 கிலோ எடையுள்ள இளவட்ட கல்லை பெண்கள் அசால்ட்டாக தூக்கி அசத்தினர்


அனைவருக்கும் பரிசு


 

இதேபோல் மற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற அனைவருக்கும் பரிசு, போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. தென் மாவட்டங்களில் நடைபெறும் வீர விளையாட்டுகளை படூரில் நடைபெற்றதை ,  அப்பகுதி மக்கள் வியந்தும் ஆர்வத்துடனும் பார்த்து ரசித்தனர் நிகழ்ச்சியில், மாற்றத்தை நோக்கி நிறுவனர் கே. ஏ.சுதாகர் ஒன்றிய கவுன்சிலர்கள் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் உட்பட மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.