சென்னையில் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புதிய ஆடைகள் அணிந்து, இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை பல்வேறு கட்டுபாடுகள் மத்தியில் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு எந்த கட்டுபாடுகளும் இல்லாமல், குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே வெடிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. 


இந்த நிலையில், சென்னையில் காற்று மாசு அனுமதிக்கப்பட்ட அளவைவிட்ட ஒன்றரை மடங்கு அதிகம் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் வெடிக்கப்பட்டதில் சென்னையில் 8 இடங்களில் காற்று மாசு அதிகமாக கண்டறியப்பட்டுள்ளது. 


காற்றின் தரக்குறியீடு படி, சென்னையில் அதிகபட்சமாக பெருங்குடி - 280, மணலி- 250, எண்ணூர் - 238, ராயபுரம் - 232, ஆலந்தூர்- 218, அரும்பாக்கம்- 212, வேளச்சேரி- 203, கொடுங்கையூர் - 200 என்ற அளவீட்டில் காற்று மாசு அடைந்துள்ளது. 


சென்னையில் ஒட்டுமொத்தமாக மற்ற நாளில் 80 வரை இருக்கும் நிலையில் நேற்று 192 என காற்றின் தரக்குறியீடு பதிவாகியுள்ளது. நகரில் தற்போது காற்றின் தரம் மோசமான நிலைக்குச் சென்றுள்ளதால், தற்போது பலருக்கும் கவலை ஏற்பட்டுள்ளது.


சென்னையில் விதியைமீறி பட்டாசு வெடித்த 163 பேர் மீது வழக்குப்பதிவு : 


சென்னையில் நேரக்கட்டுப்பாட்டு விதியை மீறி தீபாவளியன்று பட்டாசு வெடித்ததாக 163 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. 


மலைப்போல் குவிந்த பட்டாசு கழிவுகள் : 


தீபாவளியை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் மட்டும் பட்டாசு வெடித்ததில் மூலம் 500 டன் குப்பைகளை சென்னை மற்றும் புறநகர் பகுதியில் குவிந்தது. இதையடுத்து நேற்று இரவு சென்னையில் சுமார் 20 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் மூலம் இரவோடு இரவாக குப்பைகளை அகற்றியுள்ளனர். 


தலைநகர் சென்னையில் வழக்கமாக 5, 300 மெட்ரிக் டன் குப்பைகள் மட்டுமே சேகரிக்கப்படும். நேற்று மட்டும் கூடுதலாக 500 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளது.