மது போதையில் மகளிர் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இரு போலீசாரை பணி நீக்கம் செய்தது சரியே என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

சென்னை விருகம்பாக்கத்தில் செயல்பட்டு வந்த மகளிர் விடுதிக்கு, கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் விருகம்பாக்கம் காவல் நிலைய போலீசார் ராஜா மற்றும் குமரேசன் ஆகிய இருவரும், மதுபோதையில் சென்று, அங்கிருந்த இரு பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளனர்.


 

இதுசம்பந்தமாக இரு பெண்களும் அளித்த புகாரின் அடிப்படையில் வடபழனி உதவி ஆணையர் விசாரணை நடத்தினார். பின்னர்,  துறை ரீதியான விசாரணைக்குப் பின், இரு போலீசாரையும் பணிநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது.

 

இந்த உத்தரவை மேல் முறையீட்டு அதிகாரியான மாநகர காவல் ஆணையரும் உறுதி செய்து உத்தரவு பிறப்பித்தார். 

 

இதை எதிர்த்து இரு போலீசாரும் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

 

இந்த வழக்குகள் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்த போது, இரு போலீசாருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்பதாலும், புகார் அளித்த இரு பெண்களிடமும் விசாரணை நடத்தப்படவில்லை என்பதாலும், பணி நீக்க உத்தரவை ரத்து செய்து மீண்டும் பணி நியமனம் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

 

புகார்தாரர்களை உதவி ஆணையர் விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகவும், குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் உள்ளதாகவும் அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.

 

வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவண ஆதாரங்களைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமில்லை என எந்த சூழ்நிலையிலும் கருத முடியாது எனவும், விசாரணை விதிகளும், இயற்கை நீதியும் முறையாக பின்பற்றப்பட்டு பிறப்பிக்கப்பட்ட பணிநீக்க உத்தரவு சரி தான்  எனவும், இரு போலீசாரும் பணியில் நீட்டிக்க தகுதியில்லை எனவும் கூறி, இரு போலீசாரின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


 

 



மற்றொரு வழக்கு
















மீன்வளத்துறை உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வில் பி.டெக்., மீன்வளம் என்ஜினீயரிங் படித்தவர் விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


 

சென்னை, உயர்நீதிமன்றத்தில்  நாகை மாவட்டத்தை சேர்ந்த, ஆர்.எஸ்.கீதப்பிரியா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) கடந்த அக்டோபர் 13 ந் தேதி மீன்வளத்துறையில் உதவி ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பம் வரவேற்று அறிவிப்பு வெளியிட்டது. அதில், பி.டெக். மீன்வளம் என்ஜினீயரிங் படிப்பை சேர்க்கவில்லை. மாறாக விலங்கியல், மீன்வள அறிவியல் இளங்கலை, மீன்வளம தொழில்நுட்ப பட்டயப் படிப்புகளை மட்டும் சேர்த்துள்ளனர். இதனால், இந்த பதவிக்கு என்னை போல பி.டெக். மீன்வளம் என்ஜினீயரிங் படிப்பை முடித்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களால் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும். பி.டெக். மீன்வளம் என்ஜினீயரிங் படிப்பையும் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். 

 

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அறிவிப்பை ரத்து செய்ய மறுத்து விட்டார். ஆனால், இந்த வழக்கிற்கு டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும். அதேநேரம், உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வு இந்த வழக்கின் தீர்ப்பின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று உத்தரவிட்டார்.

 

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை  கீதப்பிரியா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அதில், பி.டெக். மீன்வளம் என்ஜினீயரிங் படிப்பை மீன்வளத்துறை உதவி ஆய்வாளர், ஆய்வாளர் உள்ளிட்ட பதவிக்கு நடத்தப்படும் தேர்வில் சேர்க்க வேண்டும் என்று நானும், என் தந்தையும் 2019 மற்றும் 2020 ம் ஆண்டுகளில் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகத்துக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளோம்.  நாகை மாவட்டத்தில் உள்ள டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன் வள பல்கலைக்கழகமும் இதே கோரிக்கையுடன் மனுவை 2017 ஆம் ஆண்டு முதல் பல முறை அனுப்பியும் பரிசீலிக்கவில்லை. மாறாக அரசை அணுகும்படி பதில் அளித்துள்ளது. எனவே, உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வில் பி.டெக்., மீன்வளம் என்ஜினீயரிங் படிப்பை சேர்க்க உத்தரவிட வேண்டும் என  கூறியிருந்தார்.

 

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரும், அவரது தந்தையும்,  பல்கலைக்கழகமும் பல முறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் டி.என்.பி.எஸ்.சி., பரிசீலிக்க வில்லை. எனவே, உதவி ஆய்வாளர் தேர்வுக்கு மனுதாரரை விண்ணபிக்க அனுமதிக்க வேண்டும் என்று இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளனர்.