ஏகாம்பரேஸ்வரர் கோயில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. இந்தத் தலம் பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலத்தைக் குறிக்கிறது. இந்தக் கோயிலின் முக்கிய கடவுளான சிவன் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை காமாட்சி அம்மன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். மொத்தம் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயில், 600 ஆம் ஆண்டே கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.


காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பழமையான இரட்டை திருமாளிகை மண்டபம் உள்ளது. மன்னர்கள் காலத்தில், திருமாளிகை மண்டபத்தில் அமர்ந்து, மன்னர் குடும்பத்தினர் சுவாமியை தரிசனம் செய்வதற்காக கட்டப்பட்டது. காலப்போக்கில் இரட்டை திருமாளிகை மண்டபம் சிதிலம் அடைந்து, பல ஆண்டுகளுக்கு முன் இடிந்து விழுந்தது. அதனை சீரமைக்க இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்தது. அதற்கு, முறையான திட்ட மதிப்பீடு தயார் செய்யாமல், 2014--15ல், 50 லட்சம் ரூபாய் மதிப்பில், பணியை துவக்கினர்.  இதனைத் தொடர்ந்து மேல் தள சீரமைப்பிற்கு, 79 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.


இந்நிலையில் மண்டபத்தில் இருந்த சிற்பங்கள் நிறைந்த பழைய கல்துாண்களை காணவில்லை என்பது உட்பட சீரமைப்பு பணிகளுக்கான நிதி செலவுக்கு விளக்கம் கேட்டு, காஞ்சிபுரத்தை சேர்ந்த டில்லிபாபு என்பவர், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்து சமய  அறநிலைத்துறை திருப்பணி கூடுதல் ஆணையர் கவிதா, இணை ஆணையர் சிவாஜி, உதவி ஆணையர் ரமணி, செயல் அலுவலர் முருகேசன் மீது வழக்குப்பதிய  நீதிபதி உத்தரவிட்டார். அந்த வழக்கின் தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் செயல் அலுவலர் தியாகராஜனிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் தலைமையில், காவலர் ஒருவர் ஆய்வு மேற்கொண்டனர். கோவில் செயல் அலுவலர் தியாகராஜன், ஸ்தபதி மற்றும் புகார்தாரர் முன்னிலையில் இந்த ஆய்வு நடந்தது. மேலும் செயல் அலுவலர் மற்றும் ஊழியர்களிடம் சுமார் 6 மணி நேரம்  விசாரணை நடைபெற்றது.


கண்டுபிடிக்கப்பட்ட சிலைகள்


கடந்த ஜூன் மாதம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள பொக்கிஷ அறையில் ஆவணங்களில் வராத பல சிலைகள் மற்றும் கோயிலுக்கு சொந்தமான பொருட்கள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்நிலையில் ஏகாம்பரநாதர் கோயில் பொக்கிஷ அறையில் புதியதாக 16 உற்சவர் சிலைகள் இருப்பது கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. சில  ஊழியர்கள் நடத்திய ஆய்வில் விநாயகர், லட்சுமி ,  9 நாயன்மார்கள் உள்ளிட்ட 16 சிலைகள் இருப்பது தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் சுவாரஸ்ய செய்திகளுக்கு...

 


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X