வரும் மே 26 அன்று, பிரதமர் நரேந்திர மோடி சென்னை, ஹைதராபாத் ஆகிய இரண்டு நகரங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். நண்பகலில் ஹைதராபாத்தின் ஐ.எஸ்.பியின் 20ஆம் ஆண்டு விழாவில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, அங்குள்ள முதுகலைப் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றுகிறார். தொடர்ந்து, மாலை சென்னை வரும் அவர், சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் சுமார் 31,400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். 


சென்னையில் சுமார் 31,400 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்று, தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி. இதன்மூலம், தென்னிந்தியாவின் சமூகப் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் எனவும், பல்வேறு துறைகளில் மேம்பாடு ஏற்பட்டு, புதிதாக பல வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. 


சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான மதுரை - தேனி இடையிலான ரயில் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி. இது தேனி பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் எனக் கூறப்பட்டுள்ளது. சுமார் 590 கோடி ரூபாய் செலவில், தாம்பரம் - செங்கல்பட்டு இடையில் கட்டப்பட்டுள்ள 30 கிலோமீட்டர் நீளமுள்ள ரயில் பாதையின் காரணமாக புறநகர் ரயில் சேவைகளைப் பயன்படுத்துவோர் மேலும் கூடுதல் வசதியோடு பயணிக்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. 



எண்ணூர் - செங்கல்பட்டு இடையிலான 115 கிலோமீட்டர் இயற்கை எரிவாயு பைப்லைன் சுமார் 850 கோடி ரூபாய் செலவிலும், திருவள்ளூர் - பெங்களூரு இடையிலான 271 கிலோமீட்டர் தொலைவுக்கு இயற்கை எரிவாயு பைப்லைன் சுமார் 910 கோடி ரூபாய் செலவிலும் அமைக்கப்பட்டு, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் உள்ள வாடிக்கையாளர்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றிற்குப் பயன்படும். 


சென்னையில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா  அர்பன் திட்டத்தின் கீழ், சுமார் 116 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 1152 வீடுகளையும் பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் திறந்து வைக்கிறார். அடுத்ததாக சுமார் 28500 கோடி ரூபாய் செலவில், முக்கிய 6 திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி. 


சுமார் 14870 கோடி ரூபாய் செலவில் பெங்களூரு - சென்னை இடையிலான 262 கிலோமீட்டர் நீள எக்ஸ்பிரஸ்வே சாலை கட்டப்படுகிறது. கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் வழியாகச் செல்லும் இந்த சாலை காரணமாக பெங்களூரு - சென்னை இடையிலான தொலைவை வெறும் 2 முதல் 3 மணி நேரங்களில் அடையலாம். 



அடுத்ததாக, சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையிலான 21 கிலோமீட்டர் சாலையில் 4 வழியிலான டபுள் டெக்கர் சாலை சுமார் 5850 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படுகிறது. 


மேலும், 3870 கோடி ரூபாய் செலவில் நேரலுரு முதல் தர்மபுரி வரை செல்லும் 94 கிலோமீட்டர் சாலை, 720 கோடி மதிப்பில் மீன்சுருட்டி முதல் சிதம்பரம் வரையிலான 31 கிலோமீட்டர் சாலை ஆகியவற்றின் பணிகளையும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டித் தொடக்கி வைக்கிறார். 


சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி, கன்னியாகுமர் ஆகிய ரயில் நிலையங்களின் புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டப்படுவதோடு, நவீன வசதிகளுடன் கூடிய புனரமைப்பு சுமார் 1800 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படவுள்ளது. 


அடுத்ததாகப் பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் லாஜிஸ்டிக்ஸ் பூங்கா ஒன்றை சுமார் 1400 கோடி ரூபாய் செலவில் அடிக்கல் நாட்டுகிறார். இதன்மூலம் சரக்குப் போக்குவரத்து மேலும் எளிமையாகும் எனக் கூறப்பட்டுள்ளது.