Chennai Car Parking Policy: தமிழ்நாட்டின் தலைநகரமாக இருக்கக்கூடிய சென்னை, வளர்ந்த நகரங்களில் பட்டியலில் முதன்மை நகரமாக இருந்து வருகிறது. சென்னை மாநகரம் இந்திய அளவில் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்காற்றி வருகிறது. சென்னையில் வேலைவாய்ப்புகள் அதிகளவு இருப்பதால், வெளியூரை சென்ற பல லட்சக்கணக்கான மக்கள் குடியேறி சென்னையில் வசித்து வருகின்றனர். 


அதிகரிக்கும் சென்னை மக்கள் தொகை


சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிகளவு மக்கள் தொகை சென்னையில் அதிகரித்து வருவதால், போக்குவரத்து நெரிசலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதேபோன்று சென்னை தெருக்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.


கார் வாங்கும் சென்னைவாசிகளே


சமீப காலமாக சென்னையில் கார் வாங்குபவர்களின் எண்ணிக்கையும், கணிசமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியில் குடியிருக்கும் பெரும்பாலானவர்கள் ஆர்வமுடன் கார்களை வாங்கி வருகின்றனர். 


கொரோனா வைரஸ் தொற்றிற்குப் பிறகு, கார் வாங்குபவரின் எண்ணிக்கை கணேசமாக அதிகரித்து வருகிறது. ஆனால் கார் பார்க்கிங் செய்வதற்கு இடமில்லாமல்,தெருக்களில் பார்க்கிங் செய்யும் அவலமும் ஏற்பட்டு வருகிறது.


கார்களால் இடையூறு 


இவ்வாறு பார்க்கிங் செய்வதற்கு இடம் இல்லாமல் கார் வாங்குபவர்கள், சாலை ஓரங்களில் வாகனத்தை நிறுத்தி விடுகிறார்கள். இதன் காரணமாக தேவையில்லாமல் சென்னை உள்பகுதியில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு தீர்வு காண வேண்டுமென வாகன ஓட்டிகள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். 


சென்னை மாநகராட்சி ஆலோசனை 


சாலை ஓரங்களில் கார்கள் நிறுத்துவது மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக மக்களின் கோரிக்கையின் அடிப்படையில், சென்னை மாநகராட்சி அதிகாரிகள், போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவில் கார் வாங்குபவர்களுக்கு புதிய விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


புதிய விதிமுறைகள் என்ன ? New car parking Rules 


சென்னை மாநகராட்சியில் கார் நிறுத்துவதற்கு இடம் இருந்தால் மட்டுமே, புதிய கார் வாங்கும் வகையில் புதிய விதிமுறைகளை சென்னை மாநகராட்சி கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. புதிய கார் வாங்குபவர்கள் காரை பதிவு செய்யும்போது, அதற்கான பார்க்கின் இடம் இருப்பதை உறுதி செய்யும் சான்றிதழ் வழங்க வேண்டும். 


இதற்கான சான்றிதழ் இணைப்பதை கட்டாயமாக்குமாறு அரசுக்கு போக்குவரத்து ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. சாலை ஓரங்களில் நிற்கும் கார்களால் இடையூறு ஏற்படுவதை தடுக்கவே, இது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பார்க்கிங் செய்ய சொந்த இடம் இல்லாதவர்கள், வாடகை இடங்களில் பார்க்கிங் செய்வதற்கான ஒப்பந்தங்கள் வைத்திருந்தாலும் போதுமானதாக எடுத்துக்கொள்ளும் வகையில் இந்த விதிகள் கொண்டுவரப்பட உள்ளது.